top of page
mediatalks001

நடிகராக புதிய பரிமாணம் காட்டி வரும் ஜே எஸ் கே சதீஷ்குமார்!


தயாரிப்பாளர்-விநியோகஸ்தராக தடம் பதித்த பின்னர் தற்போது நடிகராக புதிய பரிமாணம் காட்டி வரும் ஜே எஸ் கே சதீஷ்குமார்


பன்மொழி வெற்றிப் படங்களின் விநியோகஸ்தரும், தேசிய விருதுகள் வென்ற 'தங்க மீன்கள்', 'குற்றம் கடிதல்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்', 'மதயானைக் கூட்டம்', 'தரமணி', 'புரியாத புதிர்' மற்றும் விரைவில் வெளியாக உள்ள 'அண்டாவ காணோம்' உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளருமான ஜே எஸ் கே சதீஷ்குமார், நடிகராக தற்போது புதிய பரிமாணம் காட்டி வருகிறார்.


வசந்தபாலன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'அநீதி' திரைப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்திருந்த ஜே எஸ் கே சதீஷ்குமார், தனது சிறப்பான நடிப்பிற்காக பல்வேறு தரப்புகளில் இருந்தும் பாராட்டுகளை தொடர்ந்து பெற்று வருகிறார்.


2017-ம் ஆண்டு ராம் இயக்கத்தில் உருவான 'தரமணி' படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் தொடங்கிய ஜே எஸ் கே சதீஷ்குமாரின் நடிப்பு பயணம், ராம் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த 'பேரன்பு', சிபிராஜ் நடித்த 'கபடதாரி', பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியான 'பிரண்ட்ஷிப்' என்று தொடர்ந்து வந்த நிலையில் தற்போது 'அநீதி' திரைப்படத்தில் அவர் நடித்துள்ள காவல் அதிகாரி வேடம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 'கபடதாரி' மற்றும் 'பிரண்ட்ஷிப்' திரைப்படங்களின் தெலுங்கு பதிப்புகளிலும் ஜே எஸ் கே சதீஷ்குமாரே அவரது பாத்திரத்திற்கு டப்பிங் பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது.


இவற்றைத் தொடர்ந்து, அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா தயாரிப்பில் நவீன் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் 'அக்னி சிறகுகள்' திரைப்படத்தில் படம் நெடுக வரும் ஒரு மைய கதாபாத்திரத்திலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'வாழை' திரைப்படத்திலும், ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் 'யாருக்கும் அஞ்சேல்' திரைப்படத்தில் மிக முக்கிய வேடத்திலும், ஸ்ரீகாந்த் மற்றும் நட்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் 'சம்பவம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும், மீண்டும் ஹர்பஜன் சிங்குடன் 'சேவியர்' திரைப்படத்திலும் என பல்வேறு திரைப்படங்களில் ஜே எஸ் கே சதீஷ்குமார் தொடர்ந்து நடித்து வருகிறார்.


தனது நடிப்பு பயணம் குறித்து மனம் திறந்த அவர், "நான் நடிகனாவதற்கு காரணம் இயக்குநர் ராம் தான், 'தரமணி' திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடம் அளித்து என்னை நடிக்க வைத்தார், அதற்கு கிடைத்த பாராட்டுகள் மற்றும் ஆதரவு என்னை தொடர்ந்து நடிகனாக பயணிக்க செய்து கொண்டிருக்கின்றன," என்று கூறினார்.


தொடர்ந்து பேசிய ஜே எஸ் கே சதீஷ்குமார், "இத்தனை வருட தயாரிப்பு மற்றும் விநியோக அனுபவத்தில் நான் உணர்ந்தது என்னவென்றால் குணச்சித்திர வேடங்களில் நடிப்பதற்கு நடிகர்களின் தேவை எப்போதுமே உள்ளது. அதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களை மக்கள் ரசிக்கவே செய்கிறார்கள் என்பதுதான். குணச்சித்திர கதாபாத்திரங்களை தாண்டி இதர முக்கிய வேடங்களும் என்னை நோக்கி வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நல்ல கதையம்சமுள்ள படங்களில் முக்கியமான வேடங்களில் தொடர்ந்து நடிப்பேன்," என்று கூறினார்.


தயாரிப்பாளராக இருந்து நடிகராக திரைத்துறையில் பங்காற்றுவது குறித்து பேசிய அவர், நடிகர்கள் தயாரிப்பாளராகும் போது தயாரிப்பாளர்களும் நடிகர்களாவது இயல்பு தானே, நடிப்பு மற்றும் தயாரிப்பு ஆகிய இரண்டிலும் நான் தொடர்ந்து கவனம் செலுத்துவேன் என்று கூறினார்.



Comments


bottom of page