'ராட்சசன்’ படம் வெளியாகி ஐந்து வருடங்கள் ஆகிறது. இயக்குநர் ராம்குமார் இந்தப் படத்திற்கான கதையை சொல்ல ஆரம்பித்ததில் இருந்து படத்தின் திரையரங்கு வெளியீடு வரை இந்தப் படம் மீது நாங்கள் அனைவரும் வைத்த நம்பிக்கை, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு ஆகியவையே இந்த வெற்றிக்குக் காரணம் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
ஒரு தயாரிப்பாளராக, ‘ராட்சசன்’ எங்கள் எல்லோருக்கும் கேம் சேஞ்சர் படமாக அமையும் என்ற வலுவான நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆனால், எங்களின் எதிர்பார்ப்புகளையும் தாண்டி பத்திரிகை ஊடக நண்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் இந்தப் படத்திற்குக் கொடுத்த வரவேற்பு எங்களை ஆச்சரியப்படுத்தியது. படம் வெளியாகி ஐந்து வருடங்கள் ஆனாலும், திரையரங்குகளில் ‘ராட்சசன்’ படத்திற்குக் கிடைத்த கைதட்டல் மற்றும் பாராட்டுகள் இப்போதும் உற்சாகப்படுத்துகிறது. இதுமட்டுமல்லாது, நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்ற பெரும் நம்பிக்கையை ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரிக்கு தரும் விதமாகவும் இந்தப் படம் அமைந்தது.
பல சிலிர்ப்பு நிறைந்த தருணத்துடன் ‘ராட்சசன்’ கதையின் உலகத்தில் ரசிகர்களைத் திளைக்க வைத்த இயக்குநர் ராம்குமாருக்கு நன்றி. இந்தப் படத்திற்காக தனது முழு அர்ப்பணிப்பைக் கொடுத்த நடிகர் விஷ்ணு விஷாலுக்கு நன்றி. படப்பிடிப்பின் போது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல கஷ்டங்களைச் சந்தித்த அவரது கடினமான தருணங்கள் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. ஆனால் அவர் தனது அர்ப்பணிப்புடன் அவற்றை முற்றிலுமாக மறைத்துவிட்டார். நடிகர்கள் அமலா பால், முனீஷ்காந்த், காளி வெங்கட் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கொடுத்த ஆதரவிற்கு நன்றி.
ஜிப்ரான் இந்த படத்தின் மற்றொரு ஹீரோ. அவர் தனது பின்னணி இசையால் படத்தை இன்னொரு உயரத்திற்குக் கொண்டு சென்றார். எடிட்டர் சான் லோகேஷ் தனது நேர்த்தியான எடிட்டிங்கால் படத்தை இன்னும் மெருகூட்டினார். படத்தைப் பற்றிய நிறை, குறைகளை சொல்லி படத்தை சிறந்த முறையில் பார்வையாளர்களுக்கு எடுத்து சென்று அவர்களை திரையரங்குகளுக்கு அதிகளவில் வரவழைத்த விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள், யூடியூப், சமூக ஊடக வலைப்பதிவாளர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
’ராட்சசன்’ படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் ஆவதை ஒட்டி ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி ‘ராட்சசன் 2’ படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை அறிவிக்கிறது. மேலும், இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதிர்பார்த்ததை விட விரைவில் வெளியாகும் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.
நன்றி!
Comments