படப்பிடிப்பில் மிகப்பெரிய தீ விபத்தில் இருந்து மயிரிழையில் உயிர்தப்பிய 'ஃ' பட ஹீரோவும் இயக்குநரும்
அம்பிகாபதி மூவி மேக்கர்ஸ் சார்பில் பொன் செல்வராஜ் தயாரிப்பில் மற்றும் C.நளினகுமாரி இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'ஃ'. இயக்குநர் ஸ்டாலின் V இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
பிரஜின் கதாநாயகனாக நடிக்க. கதாநாயகியாக டூரிங் டாக்கீஸ் புகழ் காயத்ரி ரமா நடித்துள்ளார். இன்னொரு கதாநாயகனாக முக்கிய வேடத்தில் பருத்திவீரன் வெங்கடேஷ் நடிக்க, வில்லனாக இயக்குநர் ஸ்டாலின் நடித்துள்ளார். மேலும் ஏழாம் அறிவு ராமநாதன், KPY சரத், KPY வினோத், வடக்கு வாசல் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தாயம் படத்திற்கு இசையமைத்த சதீஷ் செல்வம் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜூங்கா, மாமனிதன் ஆகிய படங்களில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தேவசூர்யா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அரவிந்தன் ஆறுமுகம் படத்தொகுப்பை மேற்கொள்ள, சண்டைக் காட்சிகளை ஆக்சன் பிரகாஷ் வடிவமைத்துள்ளார்
சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
கர்மா ஒருபோதும் மன்னிக்காது என்கிற இந்த படத்தின் டேக் லைனே படத்தின் கதை என்ன என்று சொல்லிவிடும். யார் ஒருவரும் தெரிந்தோ தெரியாமலோ பிறருக்கு நல்லது கெட்டது என எது செய்திருந்தாலும் அதற்கான கர்மாவை அவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும் என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது.
இயக்குனர் ஸ்டாலின் இந்த படம் பற்றி கூறும்போது, "இந்தப்படத்தின் மூன்று புள்ளிகளாக பிரஜின், பருத்திவீரன் வெங்கடேஷ் மற்றும் நான் என மூவரும் நடித்துள்ளோம். ஒரு சைக்கோ ஓவியர் கதாபாத்திரத்தில் வடக்கு வாசல் ரமேஷ் நடித்துள்ளார். இந்த படம் கர்மாவை பற்றியது. நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளுக்கு ஏற்ப கர்மா நமக்கு திருப்பிக் கொடுக்கும். நாம் இளம் வயதில் நம்மை அறியாமலேயே செய்த தவறுகளுக்கு கூட கர்மா நிச்சயம் பதில் சொல்லும். அதனால் கெடுதல் செய்தால் கர்மா மன்னிக்காது என்கிற கருத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது" என்றார்.
மேலும் இந்த படத்தின் முக்கியமான சண்டை காட்சி ஒன்றை படமாக்கியபோது தீ விபத்தில் இருந்து தானும் கதாநாயகன் பிரஜினும் மயிரிழையில் உயிர்தப்பிய சம்பவத்தையும் விவரித்தார் இயக்குநர் ஸ்டாலின்.
"சென்னை தரமணியில் நானும் நாயகன் பிரஜினும் மோதும் சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. கதைப்படி மிகப்பெரிய குற்றவாளியாக நான் ஒரு குடிசையில் பதுங்கி இருப்பேன். ஆனால் போலீசார் நான் ஏதோ ஒரு மிகப்பெரிய இடத்தில் ஒளிந்து இருப்பதாக தேடிக்கொண்டிருப்பார்கள். கதாநாயகன் பிரஜின் மட்டும் நான் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து வந்து விடுவார். அப்போது எனக்கும் அவருக்கும் நடக்கும் சண்டைக் காட்சிதான் அங்கே படமாக்கப்பட்டது.
அந்த சமயத்தில் நாயகன் பிரஜின் வில்லனான என் தாடையில் குத்து விட, என் வாயில் இருக்கும் சிகரெட் பறந்துபோய் கூரையில் விழுந்ததில் குடிசை தீப்பற்றி தெரியும் என்பதுதான் காட்சி. சுற்றிலும் தீ எரியும் நிலையில் நானும் பிரஜினும் சண்டையிடும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது படிப்படியாக அதிகரிக்க வேண்டிய தீ, தொழில்நுட்ப குழுவினர் செய்த சிறிய தவறால் மிக வேகமாக பற்றி எரிய ஆரம்பித்தது. ஆனால் அதற்குள் காட்சிகளை எடுத்தாக வேண்டும் என சுதாரித்த நானும் பிரஜினும் வேகவேகமாக எங்களது காட்சிகளை படமாக்கி முடித்தோம். அந்த சமயத்தில் அதிக வெப்பத்தை தாங்கிக்கொண்டு அந்த காட்சிகளில் நாங்கள் இருவரும் நடித்தோம். கிட்டத்தட்ட ஒரு கட்டத்தில் மயிரிழையில் உயிர் தப்பினோம் என்றே சொல்லலாம். ஆனாலும் ஆக்சன் இயக்குனர் ஆக்சன் பிரகாஷ் துரிதமாக செயல்பட்டு அந்த காட்சிகளை திட்டமிட்டபடி படமாக்கி முடித்தார்" என்று கூறினார் இயக்குநர் ஸ்டாலின்.
இந்த படத்தின் படப்பட்டிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. விரைவில் இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா குறித்து அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
நடிகர்கள்
பிரஜின், காயத்ரி ரமா, பருத்திவீரன் வெங்கடேஷ், இயக்குநர் ஸ்டாலின் V, ஏழாம் அறிவு ராமநாதன், KPY சரத், KPY வினோத், வடக்கு வாசல் ரமேஷ் மற்றும் பலர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்
தயாரிப்பு ; பொன்.செல்வராஜ்
இணை தயாரிப்பு ; C.நளினகுமாரி
இயக்கம்; ஸ்டாலின் V
இசை ; சதீஷ் செல்வம்
ஒளிப்பதிவு ; தேவசூர்யா
படத்தொகுப்பு ; அரவிந்தன் ஆறுமுகம்
சண்டைக் காட்சி ; ஆக்சன் பிரகாஷ்
மக்கள் தொடர்பு ; A.ஜான்
Comments