top of page
mediatalks001

‘இறுகப்பற்று’ சவாலுடன் மனநிறைவையும் கொடுத்தது - படத்தொகுப்பாளர் மணிகண்ட பாலாஜி பரவசம்!



சவாலுடன் மனநிறைவையும் கொடுத்தது ‘இறுகப்பற்று’ ; படத்தொகுப்பாளர் மணிகண்ட பாலாஜி பரவசம்


மாயா, மாநகரம், மான்ஸ்டர் என தாங்கள் தயாரிக்கும் படங்களில் எல்லாம் தனித்தன்மை கொண்ட கதைகளாக தேர்ந்தெடுத்து தொடர் வெற்றியை பெற்று வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது தங்களது அடுத்த படைப்பாக #இறுகப்பற்று படத்தை தயாரித்துள்ளது.


வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி போன்ற நகைச்சுவை படங்களை இயக்கிய இயக்குநர் யுவராஜ் தயாளன் இந்த படத்தை இயக்கியுள்ளார். விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ கரானாயன்களாகவும், ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா அய்யப்பன், அபர்ணதி கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


இப்படம் இயக்குநர் யுவராஜ் தயாளனின் முந்தைய படங்களிலிருந்து மாறுபட்ட கதையில், கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தின் படத்தொகுப்பை JV.மணிகண்ட பாலாஜி மேற்கொண்டுள்ளார். இவர் எற்கனவே மனிதன், கன்னடத்தில் புனீத் ராஜ்குமாரின் கடைசி படமாக வெளியான லக்கிமேன், விரைவில் வெளியாக உள்ள இறைவன், கிரிமினல் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.

இறுகப்பற்று படத்தில் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து மணிகண்ட பாலாஜி கூறும்போது, “இயக்குநர் யுவராஜ் தயாளனும் நானும் கல்லூரி கால நண்பர்கள்.. அவரது முந்தைய இரண்டு படங்களில் பணியாற்றா விட்டாலும் கூட தற்போது இறுகப்பற்று படத்தின் மூலம் தான் நேரம் கூடி வந்தது என்று சொல்லலாம். அவரது முந்தைய இரண்டு படங்களுமே நகைச்சுவை கதைக்களத்தில் இருந்தது. இதில் சற்று மாறுபட்டு குடும்பங்களுக்கான ஒரு படமாக ‘இறுகப்பற்று’ உருவாகியுள்ளது.


படம் பார்ப்பவர்கள் அனைவருமே இந்தப் படத்தின் கதாபாத்திரங்களுடன் தங்களையோ தங்களுக்கு நெருங்கிய நண்பர்களையோ உறவினர்களையோ ஏதோ ஒரு விதத்தில் படம் பார்க்கும்போதே நினைத்துக் கொள்வார்கள்.


இந்த படத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ கதாபாத்திரங்களின் உணர்வுகளை ஒரு சரியான டைம் பிரேமுக்குள் சொல்ல வேண்டி இருந்தது ஒரு சவாலான விஷயமாகவே இருந்தது. படப்பிடிப்பு துவங்கிய சமயத்தில் இருந்தே எடிட்டிங்கையும் துவங்கியதால் அவ்வப்போது அடுத்து படமாக்கப்பட வேண்டிய காட்சிகள் குறித்து டிஸ்கஷன் செய்து படப்பிடிப்பின்போது அதை செயல்படுத்தினோம்.


எப்போதுமே பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து வித்தியாசமான, அதேசமயம் வெற்றி படங்களாக கொடுப்பவர்கள் என்கிற பெயரை பெற்றுள்ளார்கள் இந்த படமும் அப்படி ஒரு வித்தியாசமான கதைக்களம் தான்.. ஒரு புது முயற்சி என்று கூட சொல்லலாம். படம் பார்க்கும் ஒவ்வொரு இளம் தம்பதியினரும் ஏதோ ஒரு விதத்தில் தங்களை இந்த கதாபாத்திரங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்வார்கள். நிச்சயமாக அவர்களிடம் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கும்.


படம் பார்த்த தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இதுபோன்ற படங்கள் ஒரு படத்தொகுப்பாளருக்கு சவால் நிறைந்ததாக இருக்கும். அதேசமயம் மனநிறைவு தருவதாகவும் அமைந்து விடும். இறுகப்பற்று எனக்கு அப்படி அமைந்த ஒரு படம் தான்” என்று கூறியுள்ளார்.

Comments


bottom of page