top of page

கேரளாவில் ஜென்டில்மேன்-2 படத்திற்காக மூன்று பாடல்களை உருவாக்கிய கீரவாணி-வைரமுத்து!!

mediatalks001


12 வருடங்களுக்கு பிறகு மறக்க முடியாத அனுபவம் ; வைரமுத்துவுக்கு மன நிறைவு அளித்த ஜென்டில்மேன்-2 பாடல் பதிவு


*ஜென்டில்மேன்-2 பாடல் இசை கோர்ப்பிற்க்காக அற்புதமான சூழலை உருவாக்கி கொடுத்த

மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்*


பிரமாண்ட படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் மெகா தயாரிப்பாளர் ‘ஜென்டில்மேன்’ K.T.குஞ்சுமோன். 1993ல் இயக்குனர் ஷங்கரை அறிமுகப்படுத்தி பிரம்மாண்டமான ‘ஜென்டில்மேன்’ என்கிற வெற்றிப்படத்தை தயாரித்தார். இப்படம் வெளியாகி 30 வருடங்களான நிலையில், '‘(ஜென்டில்மேன்-2’' படத்தை தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் கே.டி.குஞ்சுமோன்.


‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் தான் இசையமைத்த ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக ஆஸ்கர் விருதை பெற்றுத்தந்து இந்திய சினிமாவையே உலக அரங்கில் பெருமைப்படுத்திய இசையமைப்பாளர் M.M.கீரவாணி இந்தப்படத்தில் இசையமைப்பாளராக இணைந்துள்ளார்.


A.கோகுல் கிருஷ்ணா இந்தப்படத்தை இயக்குகிறார் பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதுகிறார். ஒளிப்பதிவை அஜயன் வின்சென்ட்டும், கலையை தோட்டா தரணியும் கவனிக்கின்றனர்.


இந்தப் படத்தின் பாடல் இசை கோர்ப்பு பணி கடந்த ஜூலை-19ஆம் தேதி முதல் ஒரு வார காலம் கொச்சியில் உள்ள உலகப் புகழ்பெற்ற போல்காட்டி பேலசில் ( BOLGATTY PALACE )

நடந்தது.


இதற்காக கேரளாவுக்கு வருகை தந்த இசையமைப்பாளர் கீரவாணியை கவுரப்படுத்தும் விதமாக மிகப்பெரிய அளவில் வரவேற்பு விழா நடத்த ஏற்பாடுகளை செய்திருந்தார்

மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்.

எதிர்பாராத விதமாக அன்று, கேரளாவின் முன்னாள் முதல்வரும் கே.டி.குஞ்சுமோனின் மிக நெருங்கிய நண்பருமான திரு.உம்மன் சாண்டியின் திடீர் மறைவு காரணமாக அந்த விழா ரத்து செய்யப்பட்டது.


ஆனாலும் தான் வளர்ந்த ஊரான கொச்சியின் சார்பில் இசையமைப்பாளர் கீரவாணியை மறக்க முடியாத வகையில் கவுரவப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் கே.டி.குஞ்சுமோன். அப்படி கீரவாணியை கவுரவிக்க தகுதியானவர் யார் என்கிற கேள்வி வந்ததுமே, தனது நாற்பது வருட நண்பரும், பிரபல பின்னணி பாடகரும் மூத்த கலைஞருமான ஜெயச்சந்திரன் தான் அவரது நினைவுக்கு முதலில் வந்தார்.

இதனைத் தொடர்ந்து ' ஜென்டில்மேன்-2 ' படத்தின் பாடல் இசை கோர்ப்பு நடைபெறும் போல்காட்டி பேலஸுக்கு இசையமைப்பாளர் ஜெயச்சந்திரனை வரவழைக்க ஏற்பாடு செய்தார்.


போல்காட்டி பேலஸுக்கு வருகை தந்த ஜெயச்சந்திரனை கே.டி.குஞ்சுமோனும் கவிஞர் வைரமுத்துவும் வரவேற்றனர். இந்த சந்திப்பின்போது வைரமுத்துவும் ஜெயச்சந்திரனும் குஞ்சுமோனுடன் நீண்ட நேரம் தங்களது பழைய கால நினைவுகளை அசைபோட்டு மகிழ்ந்தனர்.


இந்த சமயத்தில் அங்கே வந்த ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணிக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்க முன் வந்தார் ஜெயச்சந்திரன். ஆனால் கீரவாணியோ அதை பெருந்தன்மையுடன் தடுத்து, “நீங்கள் எவ்வளவு பெரிய லெஜன்ட்.. நீங்கள் எங்களது குரு.. உங்களை பார்த்து தான் நாங்கள் வளர்ந்தோம். நாங்கள் உங்களை கவுரவிப்பதுதான் சரியாக இருக்கும்” என்று கூறி ஜெயச்சந்திரனுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார், கீரவாணி. அதன்பின்னர் கீரவாணி, வைரமுத்து, ஜெயச்சந்திரன், டைரக்டர் A.கோகுல் கிருஷ்ணா ஆகியோருக்கு மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.


பாடகர் ஜெயசந்திரனும் அவர்களோடு இணைந்து பழைய ஞாபகங்களை பகிர்ந்தார். குறிப்பாக, வைரமுத்துவும் இவரும் இணைந்து பணியாற்றிய படங்களில் கடைசியாக தனக்கு தேசிய விருது வாங்கித்தந்தது

‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்திற்காக வைரமுத்து எழுதிய ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடல் தான் என சிலாகித்து கூறினார் ஜெயச்சந்திரன்.


போல்காட்டி பேலஸில் ஜென்டில்மேன்-2 பாடல் இசை கோர்ப்பு நிகழ்வில் பங்கேற்ற அந்த ஆறு நாட்களும் தங்களது வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள் என கீரவாணி, வைரமுத்து இருவருமே மகிழ்ந்து போய் கூறியுள்ளனர். இவர்கள் அங்கிருந்து விடைபெற்று கிளம்பிய இறுதி நாளன்று போல்காட்டி பேலஸ் நிர்வாகம் தங்கள் சார்பாக கேரளாவின் பாரம்பரிய உணவு விருந்தளித்து உபசரித்தனர். அதுவும் ஒரு மறக்க முடியாத நினைவாக அமைந்தது.


“ஒரு படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என அனைவரும் ஒன்றாக இணைந்து படத்தின் பாடல் இசை கோர்ப்பில் பங்கேற்ற இதுபோன்ற அருமையான சூழல் அன்று இருந்தது. அதன் பிறகு இப்படத்தில் தான் அமைந்துள்ளது.

இந்த சூழல் தான் இன்று சினிமாவுக்கு தேவைப்படுகிறது. இப்படி ஒரு சூழலில் இசையமைப்பாளருடன் அமர்ந்து பாடல் கம்போஸ் பண்ணி கிட்டத்தட்ட 12 வருடங்கள் ஆகிவிட்டன. இப்படி அனைவரும் ஒருங்கிணைந்து பாடல் பதிவை மேற்கொண்டதாலேயே இந்தப்படத்தின் பாடல்கள் இன்னும் மிக சிறப்பாக வந்துள்ளன.


கீரவாணியை போன்ற ஒரு ஜாம்பவானுடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது எனக்கு கிடைத்த பெருமை. இந்த பாடல் பதிவு மனதுக்கு நிறைவாக இருந்தது. நீண்ட நாளைக்கு பிறகு இப்படி ஒரு மகிழ்ச்சியுடன் சென்னை திரும்புகிறேன். வேலைக்காக வந்தது மாதிரி இல்லாமல்.. ஏதோ சுற்றுலாவுக்கு வந்த உணர்வை குஞ்சுமோன் சார் ஏற்படுத்திவிட்டார்..” என்று வைரமுத்து நெகிழ்ச்சியுடன் கூறினார்.


தற்போது மூன்று பாடல்களின் கம்போஸிங் முடிந்துள்ள நிலையில், மற்ற பாடல்களின் கம்போசிங் விரைவில் நடைபெற இருக்கிறது. படத்தின் துவக்க விழா மற்றும் படப்பிடிப்பு குறித்த செய்திகள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார் மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்.

Comments

Couldn’t Load Comments
It looks like there was a technical problem. Try reconnecting or refreshing the page.

©2020 by MediaTalks. 

bottom of page