
’யுவன் ராபின் ஹூட்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பிரபல கன்னட இயக்குநர் சந்தோஷ் குமார்!
‘கேம்பஸ் கிராண்டி’ (Campus Kranti), ’ஸ்டூடண்ட்ஸ்’ (Students), ’பிருந்தாஸ் கூக்லி’ (Brundass Googly) ஆகிய திரைப்படங்கள் மூலம் கன்னட திரையுலகில் முன்னணி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் சந்தோஷ் குமார், தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். அவர் எழுதி இயக்கி தயாரிக்கும் முதல் தமிழ்ப் படத்திற்கு ’யுவன் ராபின் ஹூட்’ (Yuvan Robin Hood) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் மூலம் கன்னட நடிகர் வீரன் கேஷவ் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக பாலிவுட் நடிகை அல்பிஃயா ஷேக் அறிமுகமாகிறார். இவர்களுடன் ரித்விகா, பொன்வண்ணன், ஸ்ருதி சுதிர், தேஷ்பாண்டே, சந்திர சேகர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
பேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் சந்தோஷ் குமார் தயாரித்து இயக்கும் இப்படத்தின் துவக்க விழா மார்ச் 15 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், படக்குழுவினருடன் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
படம் குறித்து இயக்குநரும் தயாரிப்பாளருமான சந்தோஷ் குமார் கூறுகையில், “நாயகனுக்கு அவனது அம்மா காந்தி என்று பெயர் வைப்பதோடு, காந்தியை போல் அகிம்சை குணத்தோடும், அமைதியானவராகவும் வளர்க்கிறார். ஆனால், சிறு வயது முதலே காந்தி என்ற பெயரால் மற்றவர்கள் நாயகனை கேலி கிண்டல் செய்வதோடு, எது செய்தாலும் அமைதியாக இருக்க முடியுமா ? என்று கேட்டு அடித்து விடுகிறார்கள். மகனை அடித்தவர்களிடம் சண்டைக்கு செல்லும் அவனது தாயின் கடும்கோபத்தை அன்று தான் நாயகன் பார்த்து மிரண்டு போக, அம்மாவிடம் இவ்வளவு கோபம் எதற்கு என்று கேட்கிறார். அப்போது தான் அவரது தாய், உன் அப்பாவும் இப்படி தான் இருந்தார். ஊருக்காகவும், மக்களுக்காகவும் முன் நின்றவர், பிறருக்கு எதாவது பிரச்சனை என்றால் ஓடி ஓடி உதவி செய்வார். ஆனால், அவருக்கு ரவுடி என்ற முத்திரையை இந்த சமூகம் குத்திவிட்டது. அதனால், தான் நீயும் அப்படி வளரக்கூடாது என்பதால் உனக்கு காந்தி என்று பெயர் வைத்து அமைதியானவனாக வளர்க்கிறேன், என்று கூறுகிறார்.
காந்தி என்ற பெயர் மட்டும் இன்றி, அகிம்சை போக்கையும் விரும்பாத நாயகன், தன் அப்பாவின் பாதையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறார். அதன்படி, காந்தியாக இருப்பவர், ராபின் ஹூட்டாக உருவெடுத்து பாதிகப்பட்டவர்களுக்கு தனது அதிரடி நடவடிக்கையால உதவி செய்கிறார். இதனால், அரசியல்வாதிகளுக்கு பாதிப்பு ஏற்பட ராபின் ஹூட்டை அழிக்க திட்டம் போடுகிறார்கள். அதன்படி மக்களுக்கு உதவி செய்யும் ராபின் ஹூட்டை பிடிக்க காவல்துறை ஒரு பக்கம் துரத்த, மறுபக்கம் வில்லன் கும்பல் துரத்துகிறது. இரு தரப்பிடம் இருந்தும் நாயகன் தப்பித்தாரா? இல்லையா? என்பதை அதிரடியான ஆக்ஷன் காட்சிகளோடும், கமர்ஷியல் அம்சங்களோடும் சொல்வது தான் படத்தின் கதை.” என்றார்.
மார்டின் கிளமண்ட் இசையமைக்கும் இப்படத்திற்கு மேத்தீவ் ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். சரண் சண்முகம் படத்தொகுப்பு செய்கிறார்.
சென்னை, மும்பை, பெங்களூர் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு இம்மாதம் இறுதியில் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளது. நேரடி தமிழ்ப் படமாக உருவாகும் இப்படம் கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.
நடிகர்கள்:
வீரன் கேஷவ், அல்பிஃயா ஷேக், ரித்விகா, பின்வண்ணன், ஸ்ருதி சுதிர், தேஷ்பாண்டே, சந்திர சேகர் மற்றும் பலர்
தொழில்நுட்ப குழு:
தயாரிப்பு நிறுவனம் : பேஷன் மூவி மேக்கர்ஸ்
தயாரிப்பு : சந்தோஷ் குமார்
கதை, திரைக்கதை, இயக்கம் : சந்தோஷ் குமார்
இசை : மார்டின் கிளமண்ட்
ஒளிப்பதிவு : மேத்தீவ் ராஜன்
படத்தொகுப்பு : சரண் சண்முகம்
பி.ஆர்.ஓ : தர்மதுரை, சுரேஷ் சுகு
Comentarios