நாட்டில் அரசு துறையில் நடக்கும் லஞ்ச உழல் அவலங்களை சித்தார்த் தனது நண்பர்கள் பிரியா பவானி சங்கர், ஜெகன், ரிஷிகாந்த் ஆகியோருடன் சேர்ந்து நடத்தும் யூடியுப் சேனல் மூலம் ஊழல்வாதிகளை தோலுரித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முயற்சிக்கிறார்.
இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியர் வேலைக்கு மேலதிகாரி லஞ்சம் கேட்பதால் அதே அரசு வளாக மாடியில் இருந்து குதித்து ஒரு பெண் தற்கொலை செய்து இறந்து விடுகிறார்.
அந்த நேரத்தில் அங்கு வரும் சித்தார்த் அந்த பெண்ணின் தற்கொலைக்கு நியாயம் கேட்டு போராடுகிறார். அவரது போராட்டத்தினால் போலீஸ் அவரை கைது செய்கிறது .. காதலி ரகுல் ப்ரீத் சிங்கின் முயற்சியினால் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வரும் சித்தார்த் ,,, தோல்வியில் முடிந்த தனது போராட்டத்தின் விரக்தியில் சமூக வலைதளங்கள் மூலம் மேற்கொள்ளும் பிரச்சாரமான #ComeBackIndian என்ற ஹேஷ்டேக் மூலம் இந்தியன் தாத்தாவை திரும்பி அழைத்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்.
சித்தார்த்தின் சமூக வலைதள அழைப்பு தைவானில் இருக்கும் இந்தியன் தாத்தா கவனத்திற்கு போகிறது. அவர் மீண்டும் இந்தியா வருகிறார்.
முதல் பாகத்தில் சிம்ம சொப்பனமாக தமிழ்நாட்டு ஊழல்வாதிகளுக்கு உயிர் பயத்தை காட்டிய இந்தியன் தாத்தா, இந்த முறை இந்தியா முழுவதும் நடைபெறும் ஊழல்களுக்கு எதிராக தனது போராட்டத்தை தொடங்குகிறார்.
இவர் மீண்டும்இந்தியா வருவதால் ஊழல் அதிகாரிகள், தொழில் அதிபர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.
ஒரு பக்கம் நெடுமுடி வேணுவின் மகனான சிபிஐ அதிகாரி பாபி சிம்ஹா கமல் ஹாசனை பிடிக்க முயற்சி செய்கிறார்.
முடிவில் இந்தியா முழுவதும் உள்ள ஊழல்வாதிகளை இந்தியன் தாத்தா கமல்ஹாசன் வேரோடு வெட்டி வீழ்த்தினாரா ?
சிபிஐ அதிகாரி பாபி சிம்ஹாவின் பிடியில் கமல் ஹாசன் சிக்கினாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் 'இந்தியன் 2'
28 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்தியன் தாத்தாவாக பல வித கெட்டப்புகளில் அசத்தலான அனுபவ நடிப்பால் அனைவரையும் நடிப்பால் கவர்கிறார் உலகநாயகன் கமல்ஹாசன்.
கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் இன்றைய இளையதலைமுறை இளைஞர்களின் மன உணர்வாக சித்தார்த் இயல்பான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
ரகுல் ப்ரீத் சிங் ,பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி ,பாபி சிம்ஹா, மறைந்த நெடுமுடி வேணு, விவேக், குறைவான காட்சிகளில் வந்தாலும், மூன்றாம் பாகத்தில் அனைவரும் எதிர்பார்க்கும் எஸ்.ஜே.சூர்யா ,டெல்லி கணேஷ் , மனோபாலா ,தம்பிராமையா , ஜெகன் ,ரேணுகா , வினோத் சாகர் என நடித்த நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர் .
இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் அசத்தும் ரகம் . பின்னணி இசை மிரட்டல் .
ரவிவர்மனின் ஒளிப்பதிவு இயக்குநரின் பிரம்மாண்டத்திற்கு துணை நிற்கிறது .
நாட்டில் மக்களை ஏமாற்றி ஊழல் செய்பவர்களுக்கு எதிராக படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.
இந்தியன் தாத்தாவை போல இளைஞர்கள் அனைவரும் ஊழலுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற கருத்தினை திரைக்கதையில் ஆழமாக பதிவு செய்வதுடன் படத்தின் முடிவில் நாடே கொண்டாடிய இந்தியன் தாத்தாவை ஒட்டு மொத்த மக்களும் எதிர்க்கிறார்கள்.இறுதியில் சி பி ஐ யிடம் கைதாகும் கமல்ஹாசன் சாமர்த்தியமாக தப்பி செல்வதுபோல காட்சியுடன் மூன்றாம் பாகத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதுபோல் படம் முடிகிறது .
லைகா ப்ரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
ரசிகர்கள் கொண்டாடும் படமாக 'இந்தியன் 2'
ரேட்டிங் - 3.5 / 5
Comentarios