top of page
mediatalks001

“தாய்மானிடம் இசை கற்றேன்” ; குப்பன் பட இசையமைப்பாளர் எஸ்.ஜி.இளை !


கூட்டத்தில் ஒருவனாக நினைத்து போனவனை தனி ஒருவனாக மாற்றினார் டைரக்டர், நடிகர் சரண்ராஜ்

குப்பன் பட இசையமைப்பாளர் எஸ்.ஜி.இளை


தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சரண்ராஜ்.

தற்போது தனது மகன் தேவ் சரண்ராஜை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி ‘குப்பன்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். ஒரு மீனவ இளைஞனுக்கும் மார்வாடி பெண்ணுக்குமான காதலை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் ஆதிராம் இன்னொரு நாயகனாக நடிக்க, சுஷ்மிதா மற்றும் பிரியதர்ஷினி அருணாச்சலம் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். நடிகர் சரண்ராஜூம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.


இப்படத்தின் மூலம் எஸ்.ஜி.இளை (S.G.Elai) இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

தனது மகன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் என்றாலும் புதியவரான இசையமைப்பாளர் எஸ்.ஜி.இளையை,

இயக்குநர் சரண்ராஜை எப்படி கவர்ந்தார்..? என்ன மாயஜாலம் செய்தார்.. இதோ அவரே அதுபற்றி சொல்கிறார்..


“அடிப்படையில் நான் ஒரு ட்ரம்மர். பல இசை நிகழ்ச்சிகளில் வாசித்துள்ளேன். 30 மணி நேரம் இடைவிடாது ட்ரம் வாசித்து கின்னஸ் சாதனை செய்துள்ளேன். இதுதவிர வீடியோ ஆல்பங்கள், குறும்படங்களுக்கு இசையமைத்துள்ளேன். சரண்ராஜ் சாரின் ஸ்நூக்கர் விளையாட்டு கோச் மூலமாகத்தான் அவரது அறிமுகம் கிடைத்தது. அந்த சமயத்தில் நான் கொஞ்சம் சிறுவயதாக இருந்ததால் சரியான நேரத்தில் அழைக்கிறேன் எனக் கூறியிருந்தார். அப்படி ‘குப்பன்’ படம் உருவானபோது மறக்காமல் என்னை அழைத்தார்.



படத்தில் ட்ரம் வாசிக்க கூப்பிடுகிறாரோ என நினைத்துப் போன எனக்கு இசையமைப்பாளரே நீதான் எனக்கூறி இன்ப அதிர்ச்சி அளித்தார் சரண்ராஜ். அவர் சிச்சுவேஷனை சொல்லிவிட்டு ஒரு வாரம் கழித்து பாட்டு தயார் செய்து கொண்டு வருமாறு கூறினார். நான் அடுத்தநாளே வேலையை முடித்து அவர்முன் போய் நின்றதும் ஆச்சர்யமடைந்தார். சரண்ராஜ் சாரும் நல்ல இசை ஞானம் கொண்டவர் என்பதால் மெட்டு போட்டுக் காட்டியதும் அதை உடனே ஓகே செய்து விடுவார். பின்னணி இசையில் மட்டும் சில ஆலோசனைகளை வழங்கினார்.


இசைக்காக நான் தனியாக எந்த படிப்பும் படிக்கவில்லை. சினிமா பாடல் கம்போசிங் எனக்கு புதிது தான் என்றாலும் கேள்வி ஞானத்தைக் கொண்டு தான் பாடல்களை உருவாக்கினேன். இந்தப் படத்தில் நான்கு பாடல்கள்.. நான்கும் நான்கு ஜானரில் இருக்கும். குறிப்பாக இந்த படத்தில் ஹீரோ, வில்லன் தரப்பினர் எதிர் எதிராக பாடும் ராப் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படத்தின் வில்லன் கார்த்திக் மற்றும் இரண்டாவது கதாநாயகன் ஆதிராம் இருவரும் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர்.

.

எங்களது குடும்பமே இசைக்குடும்பம் தான். எனது அம்மாவுடன் பிறந்த ஐந்து சகோதரர்களுமே இசைத்தறையில் தான் இருக்கிறார்கள். அவர்களில் இசைவாணன் என்பவர் அஜித் நடித்த மைனர் மாப்பிள்ளை படத்திற்கு இசையமைத்தவர். அதேபோல என்னுடன் பிறந்தவர்கள் மொத்தம் நான்கு பேர். எங்கள் ஐந்து பேரையும் தனது ஐந்து சகோதரர்களிடம் ஒப்படைத்து இசை கற்றுக்கொள்ள செய்தார் எனது அம்மா. அப்படித்தான் ஒவ்வொருவரும் ட்ரம்ஸ், கிட்டார், கீபோர்டு என கற்றுக் கொண்டோம்.


இந்த படத்திற்கு பின்னணி இசையமைக்கும்போது இந்தப் படம் ஒரு புதுமையான கான்செப்ட்டில் உருவாகி இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டேன். அதுமட்டுமல்ல ஒரு மீனவ இளைஞனுக்கும் மார்வாடி பெண்ணுக்குமான காதலை இதில் எடுத்துச் சென்ற விதம் புதிதாக இருந்தது.


இசையில் எனக்கு தூண்டுதலாக இருந்தவர் என்றால் இசைஞானி இளையராஜா தான். என்னுடைய பேவரைட் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்.. எனது பெயரும் இளையராஜா என்று இருந்தாலும் ஏற்கனவே அதே பெயரில் நம் இசைஞானி இருப்பதால் எனக்கும் ஒரு தனித்துவம் கிடைக்க வேண்டும் என்பதால் என் தாய் தந்தை இருவரின் பெயரையும் முதல் எழுத்துக்களாக சேர்த்து எஸ்.ஜி.இளை என பெயரை மாற்றிக் கொண்டேன். அப்படி மாற்றிய நான்கே மாதத்தில் குப்பன் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. குப்பன் படத்தின் பாடல்களை கேட்டுவிட்டு இன்னும் இரண்டு படங்களுக்கு இசையமைக்க வாய்ப்பு வந்துள்ளது” என்கிறார்.


# Johnson Pro

Comments


bottom of page