MediaTalks Logo
Header Advertisement
cinema news
14 October 2026 at 21:58•14 Views

'டோரதி’ திரைப்படம் நான் எதிர்பார்த்திருந்த அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது - நடிகை ஜீவா சுப்பிரமணியம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
'டோரதி’ திரைப்படம் நான் எதிர்பார்த்திருந்த அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது - நடிகை ஜீவா சுப்பிரமணியம்

தனது திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும் போதுதான் ஒரு கலைஞருக்கு உண்மையான மனநிறைவு ஏற்படுகிறது. அப்படியான மனநிறைவை ‘டோரதி’ திரைப்படம் திருநங்கை நடிகை ஜீவா சுப்பிரமணியத்துக்கு கொடுத்துள்ளது. திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஜீவா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘டோரதி’ படத்தில் தனது நடிப்புக்குக் கிடைத்துவரும் பாராட்டுகளால் நெகிழ்ச்சியடைந்துள்ளார். ஒரு கதாபாத்திரத்துக்குக் கிடைத்த வரவேற்பு என்பதைத் தாண்டி, தனது பணியை மக்கள் கவனித்துப் பாராட்டுவதுடன் கொண்டாடவும் செய்கிறார்கள் என்ற உணர்வையும் நீண்ட காலம் அவர் எதிர்பார்த்திருந்த அங்கீகாரத்தையும் இந்தப் படம் அவருக்கு கொடுத்துள்ளது.

இதுபற்றி ஜீவா சுப்பிரமணியம் பகிர்ந்து கொண்டதாவது, “எனது நடிப்பை அங்கீகரித்து மக்கள் கொண்டாடுவதை முதல்முறையாக உணர்கிறேன். இத்தனை ஆண்டுகளாக இந்தத் தருணத்துக்காகக் காத்திருந்தேன். என் தம்பி கார்த்திக் சுப்புராஜ் மூலமாக அது இப்போது நடந்திருக்கிறது. எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மற்றும் ஒத்துழைப்பு கொடுத்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.

கார்த்திக் சுப்புராஜ், ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் மேடம் ஆகியோர் எங்கு சென்றாலும் என்னைப் பற்றி குறிப்பிடுகிறார்கள். என்னை ‘ஜீவா அக்கா’ என்று அன்போடு அழைக்கிறார்கள். அந்த அன்பும் ரசிகர்களின் ஆதரவும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.  இந்த மகிழ்ச்சி, இன்னும் பத்து ஆண்டுகள் நான் தொடர்ந்து பயணிப்பதற்கான எனர்ஜி கொடுத்துள்ளது” என்றார்.

இதுவரை சுமார் 45 திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் ஜீவா நடித்துள்ளார். ‘ஆக்கம்’, ‘தாரை தப்பட்டை’, ‘தர்மதுரை’, ‘தர்பார்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும், ‘சுழல்’, ‘கையும் களவும்’ உள்ளிட்ட இணையத் தொடர்களிலும் அவர் நடித்துள்ளார். தற்போது,‘டோரதி’ திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஹைதராபாத், பெங்களூரு, கேரளா மற்றும் இந்தித் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள், நலம் விரும்பிகள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இது தனக்கு மனநிறைவையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளதாக ஜீவா தெரிவிக்கிறார்.

’டோரதி’ திரைப்படம் மூலம் கிடைத்துள்ள அங்கீகாரம், தொடர்ந்து முயற்சி செய்து முன்னேற வேண்டும் என்ற உறுதியையும் ஊக்கத்தையும் தனக்கு அளித்துள்ளதாக அவர் நம்புகிறார். அடுத்தடுத்து புதிய பட வாய்ப்புகளையும் எதிர்பார்த்துள்ளார். தன் மீது அன்பு காட்டிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கும், அவரது இயக்கக் குழுவைச் சேர்ந்த விக்கி, கீர்த்தி, ஸ்ரீனிவாசன், பரத் ஆகியோருக்கும் ஜீவா தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். தான் மதிக்கும் நபர்களிடமிருந்து கிடைத்த இந்த அங்கீகாரமும் அன்பும், தனது வாழ்க்கையின் இந்தக் காலகட்டத்தை மிகவும் பொக்கிஷமானதாக மாற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: