top of page
mediatalks001

'மாயவன் வேட்டை’ பட விமர்சனம்


சிக்கல் ராஜேஷ், ஜின் வேடம் ஏற்று கதாநாயகனாக நடித்துள்ளார். வழக்கமான பேய் கதை போல் இல்லாமல், அறிவியல் தொடர்புடன் எடுக்கப்பட்டுள்ளது.


இஸ்லாமிய புனித நூலான குரானில் சைத்தான்கள் என்று அழைக்கப்படும் ஜின்கள் பற்றிய ஆன்மீகம் மற்றும் அறிவியல் தொடர்பை சொல்வது தான் இப்படத்தின் கதை.


ஆதாமுக்கு கட்டுப்படாத இப்லிஸ் என்ற ஜின்கள் தங்களது ராஜ்ஜியத்தை ஆளும் முயற்சிகளில் ஈடுபடுகிறது. அதற்காக தங்களது சக்திகளை பல மடங்கு வளர்த்துக்கொள்ள முயற்சியில் இறங்கும் அவைகள், மனித குலத்தில் இருக்கும் சிலரை தேர்வு செய்து அவர்களை தங்களுடன் சேர்த்துக்கொண்டால் தங்களது ராஜ்ஜியத்தை ஆள முடியும் என்பதால், அப்படிப்பட்டவர்களை தேர்வு செய்து அவர்களை ஜின் உலகத்திற்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபடுகிறது.


அதன்படி, திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருக்கும் இஸ்லாமிய பெண் ஒருவரை ஏமாற்றி அவர் மூலம் குழந்தை பெற்றெடுக்கும் ஜின் ஒன்று. அக்குழந்தைக்கு 12 வயது நிறைவடைந்ததும் தன்னுடன், தனது ஜின் உலகத்திற்கு அழைத்துச் சென்று அந்த ராஜ்ஜியத்தை ஆள நினைக்கிறது. ஆனால், இஸ்லாமிய மத போதகர்கள் ஜின்னின் செயலை அறிந்துக்கொண்டு அதை தடுப்பதோடு, அந்த ஜின்னை ஒரு பாட்டிலுக்குள் அடைத்து கடலில் வீசி விடுகிறார்கள். அதே சமயம், ஜின் தன்னுடன் அழைத்துச் செல்ல நினைக்கும் அந்த பெண்ணுக்கு கடவுள் ஆசி பெற்ற ஜின் உதவியுடன் காவலாகவும் இருக்கிறார்கள்.


இந்த நிலையில், 12 வயது சிறுமி ஆயிஷா வளர்ந்து பெரியவள் ஆகிவிட, பாட்டிலுக்குள் அடைபட்டு இருந்த ஜின்னும் விடுதலை பெற்றுவிடுகிறது. மீண்டும் ஆயிஷாவை தன்னுடன் அழைத்துச் செல்லும் நோக்கத்தில் ஜின் வர, அதனிடமிருந்து ஆயிஷா காப்பாற்றப்பட்டாளா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.


ஜின் வேடத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் சிக்கல் ராஜேஷ், தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது அவரது மேக்கப் மூலமாகவே தெரிந்துக்கொள்ள முடிகிறது. முகம் உள்ளிட்ட உடல் முழுவதும் கடுமையான மேக்கப் போட்டு நடித்தாலும் பல காட்சிகளில் அவரது ஆக்ரோஷமான நடிப்பு திறமையை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். வாய்ப்புகள் கிடைத்தால் நிச்சயம் கோலிவுட்டில் நல்ல குணச்சித்திர நடிகராக ஜொலிப்பார்.


தாமஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் இயக்குநர் செங்கை தமிழன் ராஜேஷ், காமெடியாக மட்டும் இன்றி வில்லத்தனமாகவும் நடித்து கவனம் ஈர்க்கிறார்.


12 வயது ஆயிஷாவாக நடித்திருக்கும் சிறுமி டார்த்தி, வாணி ஸ்ரீ, திவ்யபாரதி ஆகியோரும் கதபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.


சிங்கப்பூர் தமிழர் ஜாகிர் ஹூசைன் இஸ்மாயில் திகில் நிறைந்த படமாக தயாரித்துள்ளார். ஒளிப்பதிவாளர் பெரியசாமி கிராபிக்ஸ் இல்லாமல், தனது கேமரா கோணங்கள் மூலமாக பார்வையாளர்களை பயமுறுத்துகிறார்.


இசையமைப்பாளர் முகமது அசாருதீனின் இசையில் பின்னணி இசை மிரள வைக்கிறது.


கதை எழுதி இயக்கியிருக்கும் செங்கை தமிழன் ராஜேஷ், குரானில் உள்ள ஜின்கள் பற்றிய கருவை வைத்துக்கொண்டு, தனது வித்தியாசமான கற்பனை மூலம் சுவாரஸ்யமான புராண திகில் படத்தை கொடுத்திருக்கிறார்.


பார்வையாளர்களை படம் முழுவதும் படபடப்பாக வைத்திருப்பதோடு, சீட் நுணியிலும் உட்கார வைக்கிறார் இயக்குநர் செங்கை தமிழன் ராஜேஷ்!


காதல், காமெடி, செண்டிமெண்ட் என ஜனரஞ்சகமாக படம் நகர்கிறது!


ரேட்டிங் - 3.5 / 5

Comments


bottom of page