நான் சொன்னதை இப்போது தான் கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் ; ‘ரெஜினா’ டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய சுனைனா
யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’. நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படம் கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. மலையாளத்தில் 'பைப்பின் சுவற்றிலே பிரணயம்' மற்றும் 'ஸ்டார்' ஆகிய கவனிக்கத்தக்க படங்களை இயக்கிய இயக்குனர் டொமின் டி’சில்வா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார் சதீஷ் நாயர்.. இவர் ஏற்கனவே "SN Musicals" மூலம் பல சுயாதீன பாடல்களை தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘ரெஜினா’ படத்தின் இசை உரிமையை டைம்ஸ் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தநிலையில் நேற்று (மே-30) ‘ரெஜினா’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோவையில் உள்ள புரோஷன் மாலில் மாலை 6 மணி அளவில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட போலீஸ் கமிஷனர் திரு. வி.பாலகிருஷ்ணன் ஐபிஎஸ், கவுரவ விருந்தினர்களாக ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சேர்மன் திரு. எம்.கிருஷ்ணன், ஸ்ரீ பாபா தியேட்டர்ஸ் மேனேஜிங் டைரக்டர் திரு. எஸ்.பாலசுப்பிரமணியன் மற்றும் சிறப்பு பிரபல விருந்தினராக தன்னம்பிக்கை பேச்சாளரும் சன் டிவி ‘பிட்னஸ் குரு’வுமான டாக்டர் ஜெயா மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்
கோவை மக்கள் திரளாக கூடியிருந்த இந்த அரங்கத்தில் விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் ‘ரெஜினா’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அதேசமயத்தில் சோஷியல் மீடியா மூலமாக நடிகர் ஆர்யா இந்தப்படத்தின் டீசரை வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் நாயகி சுனைனா பேசும்போது, “கோவை எப்போதும் எனக்கு பிடித்த நகரம். இப்போது வரும்போது கூட அன்னபூர்ணாவுக்கு சென்று இட்லி, காபி சாப்பிட விரும்பினேன். கோவையில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கின்றனர்.
சிறுவயதிலேயே நான் நிறைய மேடை நாடகங்களில் நடித்துள்ளேன். அதனால் எனக்கு எப்போதுமே வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் விருப்பம். இதை நான் முதலில் இருந்தே சொல்லி வந்திருக்கிறேன். ஆனால் இப்போதுதான் அதை பலரும் கவனிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
நீர்ப்பறவை, வம்சம், சில்லுக்கருப்பட்டி மற்றும் சில வெப் சீரிஸ்கள் என எதை தேர்வு செய்தாலும் கதை வித்தியாசமாக இருக்க வேண்டும், அதே சமயம் மக்களுக்கு பிடித்ததாக, பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியம்.
ஒரு சாதாரண பெண் எப்படி அசாதாரணமாக பெண்ணாக மாறுகிறாள், கடினமான சூழல்களை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதுதான் ‘ரெஜினா’ படத்தின் கதை. அந்தவகையில் ‘ரெஜினா’ முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாக இருக்கும். இது போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை.
தினசரி செய்தித்தாள்கள், தொலைக்காட்சி மற்றும் இணையதளத்தில் அவ்வப்போது சில வித்தியாசமான நிகழ்வுகள், வித்தியாசமான மனிதர்களை நாம் பார்க்க முடியும். இயக்குனருடன் இந்த கதை பற்றி விவாதிக்கும்போது கூட, இதுபோன்று நிஜ வாழ்க்கையில் நடக்குமா என்று கேட்டேன். நடக்கும் என்று சொன்னார்.
மனிதர்களின் வாழ்க்கையில் பெரும்பாலானவர்கள் நகைச்சுவை, சென்டிமென்ட் என இருந்தாலும் ஒரு சிலர் அதைத்தாண்டி விசித்திரமாக நடந்து கொள்வார்கள். அவர்கள் வாழ்க்கையில் ஏதேனும் கடினமான சம்பவங்கள் நடந்திருந்தால் அதன் அடிப்படையில் வித்தியாசமாக நடந்து கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களை மையப்படுத்தி தான் இந்தப்படம் உருவாகியுள்ளது” என்று கூறினார்.
இந்த நிகழ்வை விஜய் டிவி புகழ் பாலா சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கினார்.
இந்தப்படத்திற்கு பவன் K.பவன் ஒளிப்பதிவு செய்ய, கமருதீன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். டோபி ஜான் எடிட்டிங் செய்ய, ஆடை வடிவமைப்பை ஏகன் மேற்கொள்கிறார்.
பன்மொழி படமாக தமிழில் தயாராகியுள்ள ‘ரெஜினா’ இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் இசை மற்றும் டிரைய்லர் வெளியீட்டு விழா சென்னையில் வருகிற 5ம் தேதி நடை பெறுகிறது.
-- Johnson Pro
コメント