எம் ஆர் பி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில், நடிகர்கள் மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், நடிகைகள் மீதா ரகுநாத், ரேச்சல் ரெபாக்கா, கௌசல்யா நடராஜன் ஆகியோரின் நடிப்பில் தயாராகி, மே 12 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி, விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தில் பணியாற்றிய நடிகர் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றியை பரிசளித்த ரசிகர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு நன்றி தெரிவித்தனர்.
இதற்கான பிரத்தியேகமான நன்றி தெரிவிக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தயாரிப்பாளர்கள் மகேஷ் ராஜ் பஸ்லியான், யுவராஜ் கணேசன், நடிகர்கள் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், மணிகண்டன், நடிகைகள் மீதா ரகுநாத், ரேச்சல் ரெபாகா, கௌசல்யா நடராஜன், உமா, ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் மோகன் ராஜன், கலை இயக்குனர் ஸ்ரீகாந்த், படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன், இயக்குநர் விநாயக் சந்திரசேகரன், விநியோகஸ்தர் சக்தி வேலன், கிரியேட்டிவ் புரொடியூசர் எஸ். பி. சக்திவேல் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் விநியோகஸ்தர் சக்தி வேலன் பேசுகையில், '' தமிழ் திரையுலகத்திற்கு புதுமுக தயாரிப்பாளராக களம் இறங்கி, ‘குட் நைட்’ எனும் படத்தின் பணிகளை நிறைவு செய்திருக்கும் தயாரிப்பாளர்களுக்கு முதலில் நன்றி. இப்படத்தின் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து திரையரங்குகளில் வெளியிடுவதற்கான முதல் சந்திப்பு, தயாரிப்பாளர்களுடன் நடைபெற்றது. அந்த சந்திப்பிலேயே தயாரிப்பாளர்கள் துடிப்புடனும், உற்சாகத்துடனும் இருந்தனர்.
இன்றைய தேதியில் நிறைய தரமான படங்கள் தயாராகி வருகின்றன. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டு முயற்சியாக உருவான திரைப்படங்கள், திரையரங்குகளில் வெளியாகி மக்களின் வரவேற்பை எப்படி பெறுகிறது? எவ்வளவு வசூல் செய்கிறது? என்பதனை நினைக்கும் போது அனைவருக்குள்ளும் ஒரு இனம் புரியாத பயம் வந்துவிடுகிறது. இது போன்ற சூழலில் தயாரிப்பாளர்களிடம் உங்களது படைப்பை முதலில் டிஜிட்டல் தள விற்பனையை நிறைவு செய்துவிட்டு, அதன் பிறகு திரையரங்க வெளியீடு குறித்து ஆலோசிப்போம் என வழிகாட்டுவேன். ஆனால் ‘குட்நைட்’ படக் குழுவினர் முதல் சந்திப்பிலேயே என்னிடம், ‘நாங்கள் மக்கள் கொண்டாட கூடிய படைப்பை உருவாக்கி இருக்கிறோம்’ என உறுதியாக தெரிவித்தனர். அவர்களின் அந்தப் பேச்சு, நம்பிக்கை, எண்ணம்.. அவர்களை வெற்றியை நோக்கி வழிநடத்தியது.
குட் நைட் படக் குழுவின் ஒட்டுமொத்த நம்பிக்கை, பட வெளியீட்டின் போதும் வெளிப்பட்டு ரசிகர்களிடம் சென்றடைந்தது. பொதுவாக வெற்றி என்பது கொண்டாட கூடியது தான். இந்தத் திரைப்படத்தின் வெற்றியை பன்மடங்கு கொண்டாட வேண்டும். தமிழ் திரையுலகத்திற்கும், தரமான படைப்பை உருவாக்குபவர்களுக்கும், நல்ல திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என காத்திருக்கும் என்னை போன்றவர்களுக்கும் குட் நைட் படக் குழு ஆகச் சிறந்த முன்னுதாரணம்.
தரமான.. மக்கள் ரசிக்கக்கூடிய படைப்பை வழங்கினால், அவர்கள் திரையரங்குகளுக்கு வருகை தந்து ரசித்து, திரைப்படத்தை வெற்றி பெற செய்வார்கள் என்ற எண்ணத்தை குட் நைட் படக் குழு மீண்டும் விதைத்திருக்கிறது.
பொதுவாக சில தரமான படங்களை மக்கள் ஓ டி டி எனப்படும் டிஜிட்டல் தளங்களில் தான் கண்டு ரசிப்பார்கள் என்ற எண்ணப்போக்கினை இந்த திரைப்படம் சிதறடித்திருக்கிறது. மெலோ ட்ராமா ஜானரில் தயாரான குட் நைட் திரைப்படம், வெளியான முதல் நாளில் என்ன தொகையை வசூலித்ததோ.. இரண்டாம் நாளில் அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக வசூலித்தது. மூன்றாவது நாளில் மும்மடங்கு அதிகமாக வசூலித்தது. இதற்கு சின்ன உதாரணம் சென்னையில் முதல் நாளன்று ஒரே ஒரு காட்சியுடன் மட்டுமே திரையிடப்பட்ட கமலா திரையரங்கில், இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்களில் 'குட் நைட்' திரைப்படத்திற்கு ஐந்து காட்சிகள் ஒதுக்கப்பட்டது. இந்தத் திரைப்படம் எந்த அளவிற்கு திரையரங்குகளில் வெற்றி பெற வேண்டும் என கணிக்கப்பட்டதோ.. அதை கடந்து மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள், நாயகனான மணிகண்டனை 'சின்ன விஜய் சேதுபதி' என கொண்டாடுகிறார்கள்.
இவற்றையெல்லாம் விட இப்படம் வெற்றி பெறும் என பத்திரிக்கையாளர்களும், ஊடகமும் முதலில் தெரிவித்து, இப்படத்தைப் பற்றிய நேர் நிலையான விமர்சனத்தை மக்களிடம் சேர்ப்பித்து வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். இதற்காக ஊடகத்தினருக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.
இயக்குநர் பாலாஜி சக்திவேல் பேசுகையில், '' இயக்குநர் என்னை சந்தித்து முழு திரைக்கதையை வாசிக்க கொடுத்தார். தாளில் எழுதிய திரைக்கதையை வெண் திரையில் காட்சி மொழிகளாகவும், பின்னணி இசை ஊடாகவும், ரசிகர்களுடன் எளிதாக தொடர்பு கொள்ளும் வகையிலும், படத்தை உருவாக்குவது தான் கடினம். இதனை இயக்குநர் விநாயக் எளிதாக கையாண்டிருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பொருத்தமான... திறமையான கலைஞர்களை தேர்வு செய்த விசயத்திலும் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். இதுபோன்ற நுட்பமான ஆளுமைகளை கொண்டிருக்கும் அறிமுக இயக்குநர் விநாயக்கை நான் மனதார வரவேற்கிறேன்.
குறட்டை எனும் விசயத்தை பொழுது போக்கு அம்சங்களுடன் சொல்ல இயலும் என இளைஞர் பட்டாளம் விவரித்த கதையை நம்பி முதலீடு செய்து தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நாயகனான மணிகண்டன் மிக துல்லியமான நடிப்பை வழங்குபவர். படப்பிடிப்பு தளத்தில் அவரின் நடிப்பை கண்டு வியந்திருக்கிறேன். இந்தி திரை உலகில் நவாசுதீன் சித்திக் என்ற திறமையான கலைஞர் இருக்கிறார். அவரைப் போன்ற திறமையான நடிகர் தான் மணிகண்டன். இவரை கண்டுபிடித்து இப்படத்தில் முதன்மையான வேடத்தில் நடிக்க வைத்த இயக்குநர் விநாயக்கை வாழ்த்துகிறேன். பிரபலமான நடிகராகவும், நட்சத்திர மதிப்புள்ள நடிகராகவும் உயர்வதற்கான அனைத்து தகுதிகளும் மணிகண்டனிடம் இருக்கிறது. எதிர்காலத்தில் தமிழ் திரையுலகில் இன்னும் கூடுதலான உயரத்திற்கு செல்வார் என்பது என்னுடைய நம்பிக்கை.
படத்தில் பணியாற்றிய சக கலைஞர்கள், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், கலை இயக்குநர் இசையமைப்பாளர், பாடலாசிரியர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார்.
நடிகர் ரமேஷ் திலக் பேசுகையில், '' இப்படத்திற்கு முதலில் விமர்சனம் செய்து மக்களிடம் குட் நைட் படத்தை பற்றிய அபிப்பிராயத்தை உருவாக்கியதற்காக பத்திரிக்கையாளர்களான உங்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இதனைத் தொடர்ந்து இப்படத்திற்காக தூங்காது தற்போது வரை அயராது உழைத்துக் கொண்டிருக்கும் உதவி இயக்குநர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தயாரிப்பாளரை சந்தித்து, ஒரு முறை எங்களை எல்லாம் நம்பி படமெடுக்குறீர்களே... பயமில்லையா? என கேட்டேன். அதற்கு அவர்,‘ படத்தின் வெற்றி தோல்வியை கடந்து மனதிற்கு நிறைவை தரும் கதையை படமாக தயாரித்திருக்கிறேன். இந்த மகிழ்ச்சி எனக்கு படப்பிடிப்பு தளத்திலேயே கிடைத்திருக்கிறது’ என்றார். இதற்காக அவருக்கு பிரத்யேக நன்றியினை பதிவு செய்து கொள்கிறேன்.
இப்படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் அறிமுகமான ‘வாய்மூடி பேசவும்’ என்ற படத்தில் நான் நடித்திருக்கிறேன். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய இசையமைப்பில் தயாரான இந்தப் படத்தில் நான் நடித்திருக்கிறேன். நாங்கள் கடுமையாக உழைத்து ஒரு காட்சியில் நடித்திருந்தாலும்.. அந்த காட்சியை பின்னணியிசை தான் மேம்படுத்தி, ரசிகர்களிடம் எங்களது திறமையை சேர்ப்பிக்கும்.
இயக்குநர் விநாயக் என்னுடைய மனதில் இருந்த சில விசயங்களை நுட்பமாக கண்காணித்து, எனக்கு பொருத்தமான கதாபாத்திரத்தை வழங்கினார். அவர் இதற்கு முன் ஒரு குறும்படத்திற்காக என்னை அணுகி கதை சொல்லி இருந்தார். அந்த கதை கேட்ட போது உண்மையிலேயே வியந்தேன். ஆனால் அது நிறைவேறவில்லை. அதற்கு பதிலாக அதைவிட வலிமையான கதாபாத்திரத்தை இப்படத்தில் வழங்கினார்.
பெண்கள் மட்டுமல்ல... ஆண்களும் அழலாம். அழுவதில் பாலின கட்டுப்பாடு இல்லை. படத்தில் மோகனின் அம்மா, மோகனின் மனைவியிடம் திருமணமான பிறகு ‘ஏதாவது விசேஷம் இல்லையா?’ என கேட்பார். அதற்கு நாயகி பதிலளிப்பது பொருத்தமாக இருந்தது. இந்த இடத்தில் இயக்குநர் விநாயக்கின் எழுத்து- சமூகத்தின் பிரதிபலிப்பாக இருந்தது. ஏனெனில் என்னுடைய வாழ்க்கையிலும் இதனை கடந்திருக்கிறேன். இது போன்ற நல்ல வாய்ப்பை வழங்கிய இயக்குநர் உள்ளிட்ட படக் குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.
பட தொகுப்பாளர் பரத் விக்ரமன் பேசுகையில், '' பட தொகுப்பாளராக நான் பணியாற்றி இருக்கும் முதல் திரைப்படம் இது. இப்படத்திற்காக வெளியான அனைத்து விமர்சனங்களையும் வாசித்திருக்கிறோம். அதன் சாதக, பாதக அம்சங்களையும் விவாதித்திருக்கிறோம். இது எங்களுக்கு புதிய அனுபவத்தை கற்றுக் கொடுத்திருக்கிறது.. இயக்குநர் விநாயக்குடன் மூன்றாண்டுகளாக பயணித்திருக்கிறேன். அவருடைய கதை சொல்லும் பாணி வித்தியாசமாக இருக்கும். படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். படத்தின் இறுதி கட்டப் பணிகளுக்காக தயாரிப்பாளர் முழுமையான சுதந்திரம் கொடுத்து பணியாற்ற அனுமதித்தார். இதற்காகவும் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.
ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன் பேசுகையில், '' இந்த படக் குழுவினருடன் மிக தாமதமாக தான் இணைந்தேன். படப்பிடிப்பு தொடங்குவதற்கு பத்து நாட்களுக்கு முன் தான் இயக்குநருடன் கதை விவாதத்தில் கலந்து கொண்டேன். பொதுவாக நான் பணியாற்றும் படங்களில் முன் தயாரிப்பு பணிகளிலேயே இரண்டு மாதம் அல்லது மூன்று மாதம் வரை கலந்து கொண்ட பிறகுதான் படத்தில் பணியாற்றுவேன். ஆனால் இப்படத்தின் இயக்குநருடன் பேச்சுவார்த்தை நடத்திய போது, அவருக்குள் படைப்பு குறித்தும்.. காட்சி அமைப்பு குறித்தும்.. தெளிவான புரிதல் இருந்தது. குறிப்பாக மாண்டேஜஸ் எனப்படும் காட்சிகள் கூட எப்படி வர வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். இது எமக்கு பணியாற்ற எளிதாக இருந்தது. படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.
தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பஸ்லியான் பேசுகையில், '' இது எங்களுடைய எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் சார்பில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம். தமிழில் ஒரு திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் 2014-ம் ஆண்டில் இருந்தே இருக்கிறது. அந்த சூழலில் நான் வயதில் இளையவனாக இருந்ததால் தயாரிக்க முடியவில்லை. தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் என்னுடைய நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்தார். அவர் இந்தப் படத்தின் கதையை கூறி தயாரிக்க இயலுமா? எனக் கேட்டபோது, இணைந்து தயாரிக்கலாம் என சம்மதித்தேன்.
நல்ல எண்ணம்.. திறமையான கலைஞர்கள்... ஆகியோருடன் இணைந்து தரமான படைப்பை வழங்கினால் வெற்றி கிடைக்கும் என்பதை இப்படத்தின் மூலம் உணர்ந்து கொண்டிருக்கிறேன். மே பத்தாம் தேதியன்று இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி நடைபெற்றது. அதன் பிறகு குட் நைட் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்தது. சமூக வலைதளங்கள் மூலமாக இப்படம் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்தது. பொதுவாக சிறிய பட்ஜெட்டில் உருவான தரமான படைப்புகளை ஊடகங்கள் தான் நேர்மையாக விமர்சித்து, அதனை வெற்றி பெறச் செய்யும் என சொல்வார்கள். இதனை இந்த படத்தின் வெற்றியின் மூலம் நான் நேரடியாக கற்றுக் கொண்டேன்.
இப்படத்தில் மணிகண்டன் முதல் அனைத்து நடிகர் நடிகைகளும் தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களுடைய கடுமையான உழைப்பை வழங்கினர். ஒரு தரமான வெற்றி பெறக்கூடிய படைப்பு- தனக்கு தேவையான விசயத்தை தானே ஈர்த்துக் கொள்ளும் என்பார்கள். இது குட் நைட் படத்தில் சாத்தியமானது.
நான் சிறிய வயதிலிருந்து சினிமா ரசிகன்.. எங்கள் ஊரில் ‘ஜீன்ஸ்’ படம் வெளியான போது ‘ராஜேஷ் டிடிஎஸ்’ என நவீன ஒலி வடிவமைப்பு குறித்து விளம்பரப்படுத்தியிருப்பார்கள். இதனை காண்பதற்காக சைக்கிளில் ஆர்வத்துடன் அந்த திரையரங்கத்திற்கு சென்றிருக்கிறேன்.
முதலில் இந்தப் படத்திற்கு நானும் யுவராஜ் மட்டும் தயாரிக்க திட்டமிட்டிருந்தோம். ஒரு தருணத்தில் திரைப்பட தயாரிப்பு குறித்து என்னுடைய அம்மாவிடமும் விவாதித்தேன். அவர்களும் முழு விருப்பத்துடன் தந்தையிடம் எடுத்துக் கூறி, அவரின் சம்மதத்தையும் பெற்றார். அதன் பிறகு இப்படத்தின் கதையைக் கேட்டோம். அனைவருக்கும் பிடித்திருந்தால் அப்பாவும் இப்படத்திற்காக முதலீடு செய்தார். இதனால் படத் தயாரிப்பு பணிகள் எளிதானது.
நாங்களும், தயாரிப்பாளர் யுவராஜ் கணேசனுடன் இணைந்து தரமான படங்களை மட்டுமே வழங்குவோம் என உறுதி அளிக்கிறேன். கடந்த காலகட்டத்தில் ‘ஏவிஎம்’, ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’, ஏ. எம். ரத்தினம் போன்ற தயாரிப்பு நிறுவனங்களின் படைப்புகளுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தை போல் எங்களது நிறுவனங்கள் படைப்புகளுக்கும் விரைவில் கிடைக்கும் இதற்காக நாங்கள் உறுதியுடன் பணியாற்றுவோம் என தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.
கிரியேட்டிவ் புரொடியூசர் எஸ். பி. சக்திவேல் பேசுகையில், '' இந்தப் படத்தின் தொடக்க நிலையிலிருந்து நான் தான் இடி தாங்கியாக பணியாற்றி வருகிறேன். டிசம்பர் 1, 2021 ஆம் ஆண்டில் யுவராஜ் என்னை தொடர்பு கொண்டு, ‘இப்படத்தின் கதையை கேளுங்கள். நன்றாக இருந்தால் இணைந்து பணியாற்றுவோம்’ என தெரிவித்தார். அதன் பிறகு ஸ்டுடியோ ஒன்றில் இயக்குநர் விநாயக்கிடம் இப்படத்தின் கதையை கேட்டேன். கதை கேட்கும்போது எப்போதும் எதிர்வினையாற்ற மாட்டேன். கதையை முழுவதுமாக கேட்டு முடித்த பிறகு, அடுத்த நாள் பதிலளிக்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். அதன் பிறகு அடுத்த நாள் இந்த கதை நிச்சயமாக வெற்றி பெறும் என்றேன்.
இப்படத்தில் யாரெல்லாம் நடிக்க வேண்டும் என்று பட்டியலை தயாரித்தோமோ.. அவர்கள் பெரும்பாலும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். முதலில் நாயகனாக மணிகண்டன் பெயரை எழுதி இருந்தோம். ரமேஷ் திலக் பெயரையும் எழுதி இருந்தோம். இவை எதுவும் மாறவில்லை. ஏனெனில் கதை மீது எனக்கு அளவற்ற நம்பிக்கை இருந்தது. அதன் பிறகு ஒரு வாரம் கழித்து நாயகன் மணிகண்டனை சந்தித்தோம். மணிகண்டன் இந்த படத்தில் பணியாற்றுவதற்கு நான்கு மாத கால அவகாசம் எடுத்துக் கொண்டார். அதன் பிறகு எதிலும் கவனம் செலுத்தாமல் இந்த படத்தின் மீது மட்டுமே நம்பிக்கையுடன் பயணித்தார்.
படத்தின் பணிகளை நிறைவு செய்து வெளியீட்டிற்காக எந்தவித தயக்கமும் இல்லாமல் சக்திவேலனை சந்தித்தோம். ஏனெனில் அவருடன் 'ஒ மை கடவுளே', 'பேச்சுலர்' ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிருக்கிறேன். அவருடைய உழைப்பும், அணுகுமுறையும் தெரியும். அவர் இந்தப் படத்திற்காக அணுகும் போது அவருடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வெற்றியை சத்தியமாக்கி இருக்கிறார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.
நடிகை கௌசல்யா நடராஜன் பேசுகையில், '' இந்தத் திரைப்படத்தை நட்பு வட்டாரத்துடனும் ... உறவினர்களுடனும்.. என இரண்டு முறை திரையரங்கத்திற்கு சென்று பார்த்திருக்கிறேன். திரையரங்குகளில் இளைய தலைமுறையினர் அதிகளவில் வருகை தந்து படத்தை ரசிக்கின்றனர். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. திரையரங்குகளில் சில காட்சிகளின் போது அவர்கள் வெடித்து சிரிப்பதை ரசித்து, அதை இயக்குநருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மணிகண்டனின் நடிப்பை பார்த்து ஆடிப் போனேன். ரமேஷ் திலக்கின் நடிப்பை பார்த்து அசந்து போனேன். ஒரு இயக்குநருக்கு மனைவியாக இந்த படத்தில் தான் முதன்முறையாக நடித்திருக்கிறேன். நான் வசந்த் போன்ற திறமை வாய்ந்த இயக்குநர்களுடன் பணியாற்றிருக்கிறேன். ஆனால் இளம் இயக்குநர் விநாயகக்குடன் பணியாற்றும்போது அவர் அணுகும் விதம் வித்தியாசமாக இருந்தது. மிகவும் பிடித்திருந்தது. படபிடிப்பு தளத்தில் சக நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் இயல்பாக பணியாற்றியது மறக்க இயலாதது'' என்றார்.
பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், '' திரைப்படத்திற்கு ஒரு பாடலை எழுதிய பிறகு அந்தப் பாடலின் காட்சிகள் எப்படி இருக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பும், தவிப்பும் ஒவ்வொரு பாடலாசிரியருக்கும் இருக்கும். அது இசையமைப்பாளருக்கும் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்ட பிறகு தான் பாடல்கள் எழுதப்பட்டது. அதன் பிறகு எங்களுடைய உழைப்பும், பங்களிப்பும் இதைவிட கூடுதலாக இருக்க வேண்டுமே என்ற அச்சம் ஒட்டிக் கொண்டது.
முதல் பாடல் எழுதுவதற்கு மட்டுமே பத்து நாட்களானது. அதன் பிறகு இயக்குநரின் எதிர்பார்ப்பினை முழுமையாக புரிந்து கொண்டேன். அதன் பிறகு ஒரே ஒரு பாடல் எழுதும் வாய்ப்பை மட்டும் தான் வழங்குவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இதற்காக இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் மற்றும் தயாரிப்பாளருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுடன் இணைந்து நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறேன். அவருக்கும் எனக்குமான புரிதல் தற்போது வாட்ஸ் அப்பில் குறுகிய கால அவகாசத்தில் பாடல் எழுதும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது. அவருடன் பணியாற்றும்போது உத்வேகமும், உற்சாகமும் கிடைக்கும். புதிய புதிய வார்த்தைகள் வரும். நான் எழுதிய வார்த்தைகளை.. அவர் சிறிது மாற்றம் செய்து பயன்படுத்தும் போது அதன் அழகு கூடுதலாகும். அவருடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். '' என்றார்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில், '' குட் நைட் படத்தின் விமர்சனங்கள் அனைத்திலும் ஒரு நேர்மையும், உண்மைத் தன்மையும் இருந்தது. ஒரு படத்தை பற்றிய அபிப்பிராயம் தான் அப்படத்தின் வணிகத்தை பாதுகாக்கும். திரைப்படத்தைப் பற்றி படக் குழுவினர் என்னதான் உயர்வாக எடுத்துக் கூறினாலும், அதனை ஊடகங்கள் உறுதிப்படுத்தினால் தான் கவனம் பெறும். இதற்கு நட்சத்திர நடிகர்களும் விதிவிலக்கல்ல. திரைத்துறை கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் ஆரோக்கியமாக இயங்குகிறது என்றால் அது ஊடகங்களின் ஆதரவினால் தான். இதற்காக ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் பணியாற்றிய ‘ஜோக்கர்’ படத்தைப் பற்றிய ஊடகங்களின் விமர்சனங்கள் தான், அதனை சரியான உயரத்திற்கு எடுத்துச் சென்றது. இதன் மூலம் தரமான படைப்புகள் எப்போது வெளியானாலும்.. அதற்கு ஊடகங்களில் ஆதரவு உண்டு என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
முதலில் இப்படத்தின் திரைக்கதையை முழுமையாக வாசித்தேன். வாசிக்கும் பழக்கம் எனக்கு உண்டு என்பதால் வாசித்தேன். இசையமைப்பாளருக்கு எதற்காக முழு திரைக்கதை வடிவத்தை வழங்க வேண்டும்? என சிலர் எண்ணுவர். ஆனால் வாசிப்பது முக்கியம் என கருதுகிறேன். ஏனெனில் திறமையை கற்றுக் கொள்ளலாம் அல்லது வளர்த்துக் கொள்ளலாம். ஆனால் அதனை எதற்காக பயன்படுத்த வேண்டும் என நினைக்கும் போது சில சிக்கல் வந்துவிடும். அதனால் தயாரிப்பாளருக்கு நம்பிக்கை துரோகம் செய்யாமல், முதலில் ஒரு இசையமைப்பாளர் திரைக்கதையை முழுமையாக வாசிக்க வேண்டும். அதில் அவருக்கு உடன்பாடு இருந்தால் மட்டும்தான் இசையமைக்க ஒப்புக் கொள்ள வேண்டும்.
இப்படத்தின் திரைக்கதையை வாசிக்கும் முன்னர் குடும்ப படங்கள் என்றால் அதில் உள்ள நாயக மற்றும் எதிர் நாயக கதாபாத்திரங்கள் சற்று எல்லை கடந்ததாக இருக்கும். இப்படத்தின் திரைக்கதையில் அந்த மரபு எல்லை உடைக்கப்பட்டு, குடும்பத்தில் உள்ள கதாபாத்திரங்கள் இயல்பாக சித்தரிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக இந்த சமுதாயத்தில் புழக்கத்தில் இருக்கும் சில சமூக சங்கிலிகளை எப்படி சில கதாபாத்திரங்கள் உடைத்து எறிகின்றன என்பதை கதாநாயகனின் அக்கா கதாபாத்திரம் பேசும் உரையாடலே சாட்சி.
சமூகத்திற்கு தேவையான நிறைய விசயங்களை இயக்குநர் போகிற போக்கில் திரைக்கதையில் இடம்பெற வைத்திருந்ததால் நான் பணியாற்றுவதற்கு ஒப்புக்கொண்டேன்.
அன்பு என்பதை எடுத்துச் சொல்வதற்கு முன், அது குறித்த புரிதல் நமக்கு இருக்க வேண்டும். இது இயக்குநருக்கு இருப்பதால் படத்தின் திரைக்கதையில் அதன் சாராம்சம் அதிகளவில் இடம் பிடித்திருக்கிறது.
நடிகர் மணிகண்டன் அவர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், எனது கவனத்தை கவர்ந்திருந்தார். அவர் ‘ஜெய் பீம்’ படத்தில் நடித்திருந்தார். ஒருவரை என் பிடிக்கும் என்பதற்கு எந்த காரணமும் தேவையில்லை. ஆனால் அவருக்குள் ஒரு அற்புதமான காந்த சக்தி இருக்கிறது. உடல் மொழி, புன்னகை.. இது போன்ற சிறிய சிறிய விசயங்கள் எல்லாம் ஆண்டவனின் அருள் கொடை. குறிப்பாக ‘ஜெய் பீம்’ படத்தில் பாம்பு பிடிக்கிற காட்சியில், அவரது பார்வையில் ஒரு அப்பாவித்தனம் அப்பட்டமாக தெரியும். அந்தப் பார்வை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படத்திலும் ‘சூளைமேடு மோகன்’ எனும் கதாபாத்திரம் வெகுளியானது. எந்த பிரச்சனைக்கும் முகம் கொடுக்கும். இவர் கதையின் நாயகனாக நடிக்கிறார் என்ற காரணத்திற்காகவும், இவரை பிடிக்கும் என்பதற்காகவும் இப்படத்தில் பணியாற்ற சம்மதித்தேன். ஒரு திறமையான நடிகரின் நடிப்பு இசையமைப்பாளருக்கு பெரிய அளவில் உதவி புரியும். அதனால் நடிகர் மணிகண்டன் இயக்குநர் பாலாஜி சக்திவேல் சொன்னதை போல் வர்த்தக மதிப்புள்ள நடிகராக உயர வேண்டும்
இந்தப் படத்திற்காக இசையமைப்பாளர் தேவா ஒரு பாடலுக்கு பின்னணி பாடி இருக்கிறார். அவருடன் பயணிக்கும் போது தான், அவர் கடந்து வந்த பாதையை அறிந்து ஆச்சரியமும், வியப்பம் எழுந்தது. இந்தப் படத்தில் என்னுடைய மனைவியும் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
ட்ராமா ஜானரிலான திரைப்படங்கள் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற மரபை இந்த படம் உடைத்திருக்கிறது.
நான் அண்மையில் வைரமுத்து எழுதிய ‘பாற்கடல்’ எனும் புத்தகத்தை வாசித்தேன். ஏன் ஒரு படத்தில் இடம்பெறும் அனைத்து பாடல்களையும் ஒரே பாடலாசிரியர் எழுத வேண்டும் என்பதற்கான விளக்கத்தை அவர் தெளிவுபடுத்தியிருந்தார். நாம் தமிழகத்தில் எழுத்தாளர்களை கூடுதலாக கொண்டாட வேண்டும் என நினைக்கிறேன். வலிமையான எழுத்து தான் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு அச்சாணி. இந்த திரைப்படம் எழுத்தின் மீதுதான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் எழுத்தாளர்களுக்கு உரிய அங்கீகாரமும், அவர்கள் எதிர்பார்க்கும் பொருளாதார தேவையும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். மேலும் ஒரு பாடலில் தான் படத்தின் சாராம்சம் எளிமையாக இடம்பெறுகிறது. புதிய புதிய வார்த்தைகளும் இடம்பெறும்.
இப்படத்தில் நல்லதொரு கதையை வழங்கி, சுதந்திரமாக பணியாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கிய தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.
நடிகை மீதா ரகுநாத் பேசுகையில், '' இப்படத்தின் தயாரிப்பாளர்கள், அனைத்து கலைஞர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் சமமாக பாவித்து, நட்பாக மதித்து அனைத்து உதவிகளையும் செய்தனர். இது என்னை மகிழ்ச்சி அடைய செய்தது.
இப்படத்திற்காக முதன் முறையாக இயக்குநர் என்னை சந்தித்தபோது, இந்த சந்திப்பு பத்து நிமிடம் தான் நீடிக்கும் என நினைத்திருந்தோம். ஆனால் பேச்சுவார்த்தை நீடித்த போது, எங்களுக்குள் ஒரு புரிதல் ஏற்பட்டது.. இப்படத்தின் யதார்த்தமான திரைக்கதை தான்... நான் உள்பட அனைத்து கலைஞர்களையும் ஒரே புள்ளியில் ஒன்றிணைத்தது. இந்தப் படத்தின் வலிமை என படத்தொகுப்பினை நான் கருதுகிறேன். இந்த படத்தில் நடித்திருக்கும் மணிகண்டன் மனிதநேயமிக்கவர். இதனை படப்பிடிப்பு தளத்தில் அவருடன் பணியாற்றும்போது உணர்ந்து கொண்டேன். இந்த திரைப்படத்திற்கு இசை தான் மிகப்பெரிய பக்கபலம். இதற்காக இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார்.
நடிகர் மணிகண்டன் பேசுகையில், '' இப்படத்தின் வெற்றி பத்திரிக்கையாளர்களாகிய உங்களின் நேர் நிலையான விமர்சனங்களுக்கு பிறகு தான் தீர்மானிக்கப்பட்டது. நல்ல திரைப்படங்களை உருவாக்கி இருக்கிறோம் என்பது மட்டும் மனநிறைவு உண்டாகாது. அந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மக்களின் ஆதரவை எந்த வகையில் பெறுகிறது என்பதில்தான் அதன் வெற்றி இருக்கிறது. சிறிய முதலீட்டில் உருவான ‘சில்லு கருப்பட்டி’ படத்தை அதன் தரத்தை உணர்ந்து திரையரங்கில் வெளியிட்டு சாதித்தார் விநியோகஸ்தர் சக்திவேலன். அவர் இந்த திரைப்படத்திற்கும் பணியாற்றி வெற்றி பெற வைத்திருப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.
இயக்குநரை சந்தித்து கதை கேட்டபோது, அவர் கதை சொன்ன விதம் எனக்கு பிடித்திருந்தது. கதை சொல்லிக் கொண்டிருக்கும்போது இடையில் நிறுத்திவிட்டு, இந்த இடத்தில் இந்த இசை இடம் பெறும் என்பார். அதன் பிறகு இசை ஒலித்துக் கொண்டிருக்கும் போதே மீதமுள்ள கதையை விவரிப்பார். பிறகு இசையை நிறுத்திவிட்டு, வேறொரு காட்சியில் இருந்து கதையை சொல்லத் தொடங்குவார். இவர் கதையை புரிந்து கொண்டிருக்கும் விதமும், அதனை தெளிவாக எடுத்துரைக்கும் பாணியும் தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தை உண்டாக்கியது.
முதல் பட இயக்குநர் மீதான அழுத்தத்தை அவர் எதிர்கொண்ட விதமும் எனக்கு பிடித்திருந்தது. அதே தருணத்தில் படத்தின் வெற்றிக்காக யார் எந்த கருத்தினை சொன்னாலும், அதில் உள்ள உண்மையை உணர்ந்து ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் அவரிடம் இருந்தது.. இயக்குநரிடம் இருக்கும் இந்த விசயங்கள் அவரை எதிர்காலத்தில் சிறந்த இயக்குநராக உருவாக்கும்.
இப்படத்தின் தயாரிப்பாளர்களிடம் சிலர், மணிகண்டனை வைத்து படமெடுக்கிறீர்களே..? தேவையா? என அச்சுறுத்திருக்கிறார்கள். அதற்கு அவர் இந்த கதை மீதும், மணிகண்டன் மீதும், இந்த பட குழுவினர் மீதும் நம்பிக்கை இருக்கிறது என பதிலளித்திருக்கிறார். எனக்கே என் மீது இத்தகைய நம்பிக்கை இல்லாத போது, என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திரைப்படத்திற்காக இயக்குநர் விநாயக்குடன் இணைந்து திரைக்கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறேன். அதன் போதே இப்படத்தின் தொகுப்பாளரான பரத் விக்கிரமனின் பங்களிப்பு இருந்தது. இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.
எனக்கும், ரமேஷ் திலக்கிற்கும் இருக்கும் நட்பு வித்தியாசமானது. எனக்கு விஜய் சேதுபதி எப்படி ஒரு அண்ணனாக ..வழிகாட்டியாக.. இருக்கிறாரோ.. அதேபோல் தான் ரமேஷ் திலக்கும் என் வளர்ச்சியில் அக்கறை காட்டி வருகிறார். அவரால்தான் இந்த படக் குழுவினர் எனக்கு அறிமுகமானார்கள். இந்தப் படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் நட்புடனும், உரிமையுடனும் பழகினர். அந்த அனுபவம் மறக்க இயலாது.
இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்க ஒப்புக்கொண்ட பிறகு தான், இது ஒரு திரைப்படம் என்றே பலரும் ஏற்றுக் கொண்டனர். அவரும் இப்படத்திற்காக கடுமையாக உழைத்து இன்றைய வெற்றியை சாத்தியப்படுத்தி இருக்கிறார்'' என்றார்.
இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் பேசுகையில், '' இப்படத்தின் வெற்றிக்காக பணியாற்றிய அனைவரது பெயரையும் இந்த மேடையில் குறிப்பிடுவது தான் வெற்றிக்கான அறம் என கருதுகிறேன்.
இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசர் எஸ் பி சக்திவேல், நிர்வாக தயாரிப்பாளர் ஹரிஷ், ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன், பட தொகுப்பாளர் பரத் விக்கிரமன், கலை இயக்குநர் ஸ்ரீகாந்த், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் மோகன் ராஜன், ஆடை வடிவமைப்பாளர் பிரவீன் மற்றும் பிரதீபா, நடிகர்கள் மணிகண்டன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், நடிகைகள் மீதா ரகுநாத், ரேச்சல் ரெபாக்கா, உமா, கௌசல்யா நடராஜன், அமுதா என அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு கதையை எழுதி முடித்த பிறகு அது முதலில் இயக்குநர் குழுவிற்கு தான் செல்லும். அந்த தருணத்திலிருந்து தொடங்கி, இப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெறும் இந்த தருணம் வரை அவர்களது அயராத உழைப்பு தொடர்கிறது. இவர்களுக்குத்தான் என்னுடைய முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்து திரைப்படங்களும் கூட்டு முயற்சியில்தான் உருவாகிறது. தனிநபராக ஒரு திரைப்படத்தை உருவாக்கிட இயலாது. இதுதான் கலையின் அழகு என நான் நம்புகிறேன். மேலும் நடிகர்கள், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களின் கடின உழைப்பால் உருவான திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பிக்கும் பணியை பத்திரிக்கையாளர்களான நீங்கள் தான் மேற்கொள்கிறீர்கள். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் காட்சிக்கு பிறகு, நீங்கள் தெரிவித்த விமர்சனம்.. எழுதிய எழுத்துக்கள்.. ஆகியவை தான் இப்படத்தின் வெற்றிக்கு அச்சாணியாக இருந்தது. இதற்காக 'குட் நைட்' படக் குழு, உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறது.
சிறிய முதலீட்டில் உருவான படம் இதற்கு எத்தனை திரையரங்குகள் கிடைக்கும்? எந்த தேதியில் வெளியாகும்? எந்த படங்களுடன் வெளியாகும்? என அச்சத்துடன் நாங்கள் இருந்தோம். எங்களின் அச்சத்தை அகற்றி, திரையரங்கத்தை வழங்கி, கை கொடுத்து மேலே உயர்த்திய விநியோகஸ்தர் சக்திவேலனுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்முடைய வாழ்க்கையில் எல்லா காலகட்டத்திலும் முக்கியமான நபர்கள் அறிமுகமாவார்கள். அப்படி என் வாழ்க்கையில் அறிமுகமான நபர் தான்.. நண்பர்தான் யுவராஜ் கணேசன். இப்படத்தின் கதையை எழுதி மூன்றரை வருடங்கள் வரை பல நிறுவனங்களுக்கு சென்று கதையைச் சொன்னேன். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, நண்பர் யுவராஜிடம் ‘மீண்டும் உதவி இயக்குநராக பணியாற்ற திட்டமிட்டிருக்கிறேன்’ என சொன்னேன். உன் கதையை யாரும் தயாரிக்க முன்வரவில்லை என்றால், நான் தயாரிக்கிறேன் என நம்பிக்கை கொடுத்தார். அப்போது அவரிடம் ஒரு ரூபாய் கூட இல்லை. அதன் பிறகு அவருடன் தயாரிப்பாளர்கள் மகேஷ் ராஜ் பஸ்லியான், அவரது தந்தை நாசரேத் பஸ்லியான் இணைந்தனர். இந்த மூவரும் இல்லை என்றால் இந்த படம் உருவாகி இருக்காது.
முதல் பட இயக்குநருக்கு பல்வேறு நெருக்கடிகளும், அழுத்தங்களும் இருக்கும் என்பார்கள். ஆனால் எனக்கு எந்தவித அழுத்தமோ... நெருக்கடியோ.. இல்லை. நான் எழுதிய கதையில் சிறிய அளவிற்கு கூட சமரசம் செய்யாமல், முழுமையான சுதந்திரத்துடன் படத்தினை உருவாக்கினேன். இதனை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
இந்தப் படத்தின் வெற்றியால் துள்ளிக் குதித்து சந்தோஷத்தை கொண்டாடாமல் இயல்பாக இருப்பதற்கு இப்படத்தில் நாயகனாக நடித்த மணிகண்டனின் நட்பும், அவருடனான உரையாடலும் தான் காரணம்.
இப்படத்திற்காக இயக்குநர் பாலாஜி சக்திவேலை சந்தித்து அவரிடம் திரைக்கதையை வழங்கினேன். அவர் அதை வாசித்து விட்டு பாராட்டியது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் இயக்குநருக்குரிய முன்னுரிமையும் முக்கியத்துவத்தையும் அளித்து பணியாற்றியது மறக்க இயலாத அனுபவம்.
இப்படத்தின் திரைக்கதையை வாசிப்பதற்காக தயாரிப்பு நிறுவனம் அனைத்து கலைஞர்களையும் ஒருங்கிணைத்தது. ஆரோக்கியமான உரையாடலுக்காக நேரமும், வாய்ப்பும் அளித்ததற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தில் ஜோதிடர் ஒருவர் பேசும் காட்சியில் முதலில் அவருக்கான பதிலை ரமேஷ் திலக் தான் பேசுவதாக அமைத்திருந்தேன். அப்போது அக்காவாக நடித்த நடிகை ரேச்சல், 'இப்போதும் பெண்களுக்காக ஆண்கள்தான் பரிந்து பேச வேண்டுமா?' என கேட்டார். அவருடைய பேச்சிலிருந்த வீரியம் புரிந்து உறைந்து போனேன். அதன் பிறகு மணிகண்டனிடம் விவாதித்து அக்கா பேசுவது போல் உரையாடலை மாற்றினோம். இந்த காட்சியினை திரையரங்கில் காணும் போது கிடைக்கும் கைத்தட்டல்களுக்காக.. நான் இந்த தருணத்தில் நடிகர் ரேச்சலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார்.
Comments