’’குடும்பஸ்தன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
ஆடை வடிவமைப்பாளர் மீரா, “எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர் வினோத், இயக்குநர் ராஜேஷூக்கு நன்றி. என்னுடைய முதல் படமே குடும்பப் படமாக அமைந்துள்ளது. ஆதரவு கொடுத்த ஒட்டுமொத்த குழுவுக்கும் நன்றி”.
கலை இயக்குநர் சுரேஷ் பாலாஜி, “எனக்கு வாய்ப்புக் கொடுத்த படக்குழுவினருக்கு நன்றி. படத்தில் ஜாலியாக வேலை செய்தோம். உங்களுடைய ஆதரவு தேவை”.
எடிட்டர் கண்ணன் பாலு, “’குடும்பஸ்தன்’ எனக்கு ஸ்பெஷல் படம். நன்றாக படம் வந்திருக்கிறது. தியேட்டரில் பாருங்கள்”.
ஒளிப்பதிவாளர் சுஜித் சுப்ரமணியன், “இயக்குநர் ராஜேஷூடைய கதைக்கு தொழில்நுட்பக் கலைஞர்களாக நாங்கள் ஆதரவு கொடுத்திருக்கிறோம் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மொத்த படக்குழுவினருக்கும் நன்றி. இந்தப் படத்தில் வேலை செய்தது ஆசிர்வதிக்கப்பட்டதாக இருந்தது. எடிட்டர் கண்ணன் என்னுடைய கிளாஸ்மேட். இருவரும் ஒரே படத்தில் அறிமுகமாகிறோம் என்பது மகிழ்ச்சி. டெக்னீஷியன்ஸ் எங்கள் மேல் அழுத்தம் கொடுக்காமல் இருந்த புரொடக்ஷன் டீமுக்கு நன்றி” என்றார்.
இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் வைசாக், “இந்த படத்தை அறிமுகம் செய்த மாதேவனுக்கு நன்றி. நிறைய புதுவிஷயங்கள் இந்தப் படத்தில் கற்றுக் கொண்டேன். படம் நன்றாக வந்திருக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என்னுடைய மியூசிக்கல் டீமுக்கும் நன்றி. படத்தை ஜனவரி 24 அன்று திரையரங்கில் பாருங்கள்”
பப்ளிசிட்டி டிசைனர் வின்சி ராஜ், “’குடும்பஸ்தன்’ என சொல்லும்போது சந்தோஷமாக எல்லோரும் குடும்பத்துடன் வந்து பார்க்க வேண்டும் என்று படமாக்கி இருக்கிறோம். படம் நன்றாக வந்திருக்கிறது”.
எழுத்தாளர் பிரசன்னா பாலச்சந்தர், “நக்கலைட்ஸ் என்ற யூடியூப் சேனலில் ஆரம்பித்த இந்த பயணம் இப்போது முழுமையான விஷயமாக திரைப்படம் எடுத்திருக்கிறோம். இந்தப் படம் சாத்தியமாவதற்கு பலபேர் காரணம். ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. ‘குடும்பஸ்தன்’ என்ற பெயர் பழையதாக இருந்தாலும் கதை எப்போது பார்த்தாலும் புதிதாக இருக்கும். இதன் கதாநாயகன் நம்மில் ஒருவராக சராசரியாக எந்நேரமும் உழைத்துக் கொண்டிருக்கும் ஒருவனாக இருக்க வேண்டும் யோசித்தபோது, மணிகண்டன் சரியாக இருப்பார் என நானும் ராஜேஷூம் அவரிடம் பேசினோம். எங்களை விட மணிகண்டன் இந்த கதையை நம்பினார். நடிகராக மட்டுமல்லாது கதைக்கும் அவர் நிறைய இன்புட் கொடுத்தார். இந்த கதை அறுசுவை உணவு சாப்பிட்ட உணர்வு கொடுக்கும். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.
நடிகர் ஜென்சன் “ரொம்ப ஜாலியாக, எதார்த்தமாக ஆரம்பித்த படம் இது. யூடியூப் ஆரம்பித்து இப்போது படம் செய்யும் அளவுக்கு நாங்கள் வளர்ந்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஓரளவுக்கு நல்ல நடிகன் என எல்லாரும் சொல்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் பிரசன்னா அண்ணாதான். அவருக்கு நன்றி. இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். மணிகண்டன் அண்ணனின் மிகப்பெரிய ரசிகன் நான். குரு சாரின் ‘பாட்டல் ராதா’ படத்திற்கும் வாழ்த்துக்கள்”.
நடிகை ஷான்வி, “படக்குழுவினர் எல்லோரும் எனக்கு நல்ல சப்போர்ட் செய்தார்கள். இந்தப் படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்த தயாரிப்பாளர் வினோத், இயக்குநர் ராஜேஷூக்கு நன்றி. நம்ம எல்லோர் வீட்டிலும் நடக்கும் கதைதான் இது. டிரெய்லர் எப்படி சிரித்து ரசித்தீர்களோ அதேபோலதான் படமும் இருக்கும்” என்றார்.
தயாரிப்பாளர் வினோத்குமார், “படம் நன்றாக வந்திருக்கிறது. ஜனவரி 24 அன்று படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.
நடிகர் குரு சோமசுந்தரம், “இந்தப் படத்தின் கதை எனக்குப் பிடிச்ச ஜானர், சீரியஸான காமெடி கதை கொண்ட படம் இது. நான் எதிர்பார்த்திருந்த சமயத்தில் இயக்குநர் ராஜேஷ் இந்த கதையோடு வந்தார். எல்லா விதத்தில் இருந்தும் சினிமாவில் நுழையலாம். இவர்கள் யூடியூப் வழியாக வந்திருப்பது மகிழ்ச்சி. இவர்களுக்கு பார்வையாளர்கள் நீங்கள் நல்ல வரவேற்பு கொடுக்க வேண்டும். ‘விக்ரம் வேதா’, ‘காலா’வில் மணிகண்டனைப் பார்த்து வியந்திருக்கிறேன். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். தயாரிப்பாளர் மிகவும் கனிவானவர். தொழில்நுட்பக் குழுவினரின் உழைப்பு என்னை பிரமிக்க வைத்தது. படம் ரொம்ப நன்றாக இருக்கிறது. படம் பாருங்கள்” என்றார்.
இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, “இது என்னுடைய குடும்ப விழா. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்திற்கு ஒரு தயாரிப்பாளரிடம் கதை துல்கர் டேட் வாங்கி வேலை ஆரம்பிக்க இருந்த சமயத்தில் அந்தத் தயாரிப்பாளர் படத்தில் இருந்து விலகினார். அந்த சமயத்தில் எனக்கு பக்கபலமாக இருந்தது வினோத் சாரும் குமார் சாரும்தான். அந்தப் படம் நான் நினைத்த மாதிரி வந்ததற்கு காரணம் வினோத் சார்தான். அவர் எடுத்திருக்கும் படம்தான் ‘குடும்பஸ்தன்’. யதார்த்தமான கதை இது. எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நிச்சயம் உங்கள் ஆதரவு தேவை”.
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி, “என்னுடைய கனவை அடைய ஆதரவு கொடுத்த என் குடும்பத்திற்கு நன்றி. நக்கலைட்ஸூம் என் குடும்பம்தான். தொழில்நுட்பக் குழுவினர் சிறப்பான பணியைக் கொடுத்துள்ளனர். முத்தமிழ், நிவி, ஜென்சன் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். ஜென்சன் தமிழ் சினிமாவின் அடுத்த நாகேஷ். பிரசன்னா எனக்கு பல விஷயங்களில் வழிகாட்டியுள்ளார். அவருக்கு நன்றி. படம் சிறப்பாக வந்திருக்கிறது”.
நடிகர் மணிகண்டன், “இரண்டரை வருஷத்திற்கு முன்பு ராஜேஷை இந்தக் கதைக்காக சந்தித்தேன். ‘குட்நைட்’, ‘லவ்வர்’ படம் ஏற்கனவே ஒத்துக் கொண்டதால் இந்தப் படத்தில் நான் நடித்தாக வேண்டும் என காத்திருந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. முதலில் இயக்குநர் ராஜேஷ் ஒரு அட்வென்ச்சர் கதை எழுததான் நினைத்தார். பிறகு இன்றைய தேதியில் ஒரு குடும்பம் நடத்துவதே பெரிய அட்வென்ச்சர் என்பதால் அதையே படமாக்கியிருக்கிறார். பார்வையாளர்களுக்கும் பல வழியில் இது கனெக்ட் ஆகும். குரு சோமசுந்தரத்தின் ‘பாட்டல் ராதா’ படமும் ‘குடும்பஸ்தன்’ படத்தோடு வருகிறது. நான் ஒரு படம் பார்த்து எமோஷனல் ஆகி அழுவது அரிது. அது ’பாட்டல் ராதா’ படத்தில் நடந்திருக்கிறது. அவருக்கும் வாழ்த்துக்கள். ‘குடும்பஸ்தன்’ படத்தில் எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கொங்கு தமிழை நக்கலைட்ஸ் டீம் எனக்கு பயிற்சி கொடுத்தார்கள். பிரசன்னா சார் எனக்கு நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்தார்.
டெக்னிக்கல் டீமும் கஷ்டப்பட்டு சிறப்பாக செய்திருக்கிறார்கள். கோபப்படாத கனிவான தயாரிப்பாளர் வினோத். எங்கள் மேல் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி சார். என் வாழ்க்கையில் அதிக சண்டை போட்ட நபர்களில் இயக்குநர் ராஜேஷூம் ஒருவர். அது எல்லாம் படம் நன்றாக வர வேண்டும் என்பதற்காகதான். அதை சரியான விதத்திலும் அவர் புரிந்து கொண்டார். சினிமாவில் சின்ன பெயர் எடுக்கவே பெரிய உழைப்பு தேவையாய் இருக்கிறது. நான் செய்த சின்ன வேலைகளுக்கு எல்லாம் பெரிய பாராட்டு கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த படமும் உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்.
Comments