‘பிளாக் கோல்டு’ - விமர்சனம்

எம்.எம். ஸ்டூடியோஸ் சார்பில் எம். மூர்த்தி தயாரிப்பில், தீரன் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘பிளாக் கோல்டு’
நாயகன் வெற்றி கார் கம்பெனியில் மெக்கானிக்காக பணிபுரிந்து தந்தை லிவிங்ஸ்டன் தாய் துளசி மற்றும் தங்கையுடன் அமைதியான சந்தோஷத்துடன் வாழ்ந்து வரும் நிலையில் நாயகி பிரியலயாவை காதலிக்கிறார்.
இந்நிலையில் தலைமுடி ஏற்றுமதி தொழிலை செய்யும் வெங்கடேஷின் நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார் லிவிங்ஸ்டன்.
மற்றொரு பக்கம் தியேட்டர் அதிபரான அருள் டி சங்கர் தன் அடியாட்களுடன் கடத்தல் தொழிலில் போலீசின் ஆதரவோடு ஈடுபட்டு வருகிறார்.

இச் சுழலில் ஆந்திரா மாநிலமான திருப்பதியிலிருந்து சுமார் ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள தலைமுடியை ஏற்றிக்கொண்டு லாரி ஓட்டுநரான லிவிங்ஸ்டன் சென்னை திரும்பிக் கொண்டிருக்கும் போது, வழியில் திடீரென்று மாயமாகி விடுகிறார்.
லாரியுடன் ரூ.5 கோடி சரக்குடன் லிவிங்ஸ்டன் மீது சந்தேகப்பட் டு அவர் மீது திருட்டு பழியை சுமத்துகிறார் உரிமையாளரான வெங்கடேஷ்.
இந்த சம்பவத்தால் காணாமல் போன சரக்கை லாரியுடன் மீட்டு தருமாறு காவல்துறை அதிகாரி அபிராமி வெங்கடாச்சலத்திடம் புகார் அளிக்கிறார் வெங்கடேஷ்.
இந்த வழக்கின் தீவிர விசாரணையை தொடங்கும் அபிராமி வெங்கடாச்சலம் வெற்றியை அழைத்து லிவிங்ஸ்டனை பற்றி விசாரிக்கிறார் .
மனமுடைந்த நிலையில் தந்தையை நினைத்து கலங்கும் வெற்றி, அவர் மீது விழுந்த திருட்டு பழியை போக்கி அவரை கண்டுபிடித்து மீட்டு வர தனக்கான பாதையில் களத்தில் அதிரடியாக இறங்குகிறார் .
இறுதியில் நாயகன் வெற்றி கடத்தப்பட்ட லிவிங்ஸ்டனை கண்டுபிடித்து கடத்தல் கும்பலிடம் இருந்து அவரை மீட்டு வந்தாரா ? ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள கருப்பு தங்கமான தலைமுடியை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு வாகனத்தை கடத்தியவர்கள் யார் ? என்பதை கிரைம் மற்றும் ஆக்ஷன் திரில்லராக விறு விறு ப்பாக உருவாக்கப்பட்ட படம்தான் ‘பிளாக் கோல்டு’.
நாயகனாக நடித்திருக்கும் வெற்றி இயல்பான நடிப்பில் காதலனாகவும் , தந்தைக்காக கலங்கும் மகனாகவும் ,அவரை தேடும் காட்சிகளில் காட்டும் தீவிரம் என உணர்வுபூர்வமான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் .
நாயகியாக நடித்திருக்கும் பிரியலயா அளவான நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார் .
கம்பீர தோற்றத்துடன் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அபிராமி வெங்காடச்சலம், நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் லிவிங்ஸ்டன் ,அம்மாவாக நடித்திருக்கும் துளசி, நைனா ராஜா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருள் டி.சங்கர், நிறுவன முதலாளியாக நடித்திருக்கும் ஏ. வெங்கடேஷ், நைனா மகளாக நடித்திருக்கும் சபிதா ராய், ராமர், டெலிபோன் ராஜ் ,கராத்தே வெங்கடேஷ், அஜித் வெங்கடேஷ் , ஜப்பான் குமார் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பான நடிப்பில் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர் .
கவாஸ்கர் அவினாஸ் இசையும் ,ஒளிப்பதிவாளர் சந்தோஷ் குமார் வீராசாமியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .
தங்கத்தின் நிகரான மதிப்புடன் கருப்பு தங்கமாக சர்வதேச அளவில் பல கோடி வியாபாரமாக தலைமுடி ஏற்றுமதி தொழிலை மையமாக கொண்ட கதையுடன் ஆரம்பம் முதல் முடிவு வரை விறு விறுப்பான திரைக்கதை அமைப்பில் சுவாரஸ்யமாக ஆலயங்களில் பக்தர்கள் நேர்த்தி கடனாக வழங்கும் தலைமுடியின் அறியப்படாத பல தகவல்களை சொல்வதுடன் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து கிரைம் கலந்த ஆக்ஷன் திரில்லர் படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் தீரன் அருண்குமார்.
மொத்தத்தில், ‘கருப்பு தங்கம்’ பரபரப்பான ஆக்ஷன் திரில்லர்.
ரேட்டிங் - 3.5 / 5


