top of page
mediatalks001

ஒரு மடத்தனமான... மூடத்தனமான.. நம்பிக்கை கொண்ட என் அம்மா கதாபாத்திரம்- ஊர்வசி!

'


சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகையும், குணச்சித்திர நடிகையுமான ஊர்வசி கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்' எனும் திரைப்படம், ஜூன் மாதம் 16ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.


அறிமுக இயக்குநர் சுபாஷ் லலிதா சுப்ரமணியன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்'. இதில் ஊர்வசி, பாலு வர்கீஸ், கலையரசன், குரு சோமசுந்தரம், சுஜித் சங்கர், அபிஜா சிவகலா, மணிகண்டன் ஆச்சாரி, பானு, மிருதுளா மாதவ், சுதீர் பரவூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்வரூப் பிலிப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. வி. சுப்பிரமணியன் மற்றும் அசோக் பொன்னப்பன் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜாய் மூவி புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் டாக்டர் அஜித் ஜாய் தயாரித்திருக்கிறார்.


மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற இந்த திரைப்படம், தற்போது தமிழில் வெளியாகிறது. இதனையொட்டி சென்னையில் படக்குழுவினர் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் வசனகர்த்தா ஆனந்த் குமரேசன், நடிகர்கள் கலையரசன், குரு சோமசுந்தரம், நடிகை ஊர்வசி, இயக்குநர் லலிதா சுபாஷ் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தமிழ் மற்றும் மலையாளத்தில் வசனம் எழுதி இருக்கும் ஆனந்த் குமரேசன் பேசுகையில், '' சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ் படத்தின் மலையாள பதிப்பில் தமிழ் கதாபாத்திரங்கள் இடம் பிடித்திருந்தன. அங்கு தமிழர்கள் வாழும் பகுதியில் கதை நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. அந்தப் பகுதியில் வாழும் தமிழரான கலையரசன் எனும் கதாபாத்திரத்திற்காக தமிழில் வசனம் எழுதினேன். அதன் பிறகு இந்த படம் தமிழ் ரசிகர்களுக்கும் பொருத்தமானதாக இருக்கும் என படக் குழுவினர் தீர்மானித்தனர். அதன் பிறகு தமிழுக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்தேன். தமிழ் ரசிகர்களுக்கும் ஏற்ற என்டர்டெய்னராக இந்த படம் இருக்கும். படம் பார்க்க திரையரங்கத்திற்கு வருகை தரும் ரசிகர்களை இந்த 'சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்' ஏமாற்றாது. 'காக்கா முட்டை',' ஐங்கரன்', 'கார்கி', 'ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட்'' ஆகிய படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறேன். தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நட்சத்திர நடிகையாக இருக்கும் ஊர்வசியுடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாத அனுபவம். '' என்றார்.


நடிகர் குரு சோமசுந்தரம் பேசுகையில், '' நடிகை ஊர்வசியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய நெடுநாள் கனவு.‌ இயக்குநர் கதை சொன்னவுடன் உடனே மறுப்பு தெரிவிக்காமல் ஒப்புக்கொண்டேன். இருப்பினும் கலையரசன் கதாபாத்திரம் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. பிறகு ஊர்வசியுடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை தவற விடக்கூடாது என்பதற்காக சம்மதம் தெரிவித்தேன். படம் சிறப்பாக அமைந்திருக்கிறது. மலையாளத்தில் வெற்றி பெற்றது போல் தமிழிலும் வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறேன். தயாரிப்பாளர் டாக்டர் அஜித் ஜாய். மிக தனித்துவமானவர். அவர்தான் புதிய திறமையாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பளித்து அடையாளப்படுத்தியவர். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.


நடிகர் கலையரசன் பேசுகையில்,'' நான் மலையாளத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட முதல் படம் இது. அதனால் இந்தப் படம் எனக்கு ஸ்பெஷல். படத்தின் கதையை தொலைபேசி வாயிலாகத்தான் இயக்குநரிடமிருந்து கேட்டேன். இருப்பினும் இந்த திரைப்படத்தில் ஊர்வசி மேடமும், குரு அண்ணாவும் இருக்கிறார்கள் என்றவுடன், மறுக்காமல் ஒப்புக்கொண்டேன். தற்போது அனைத்து மொழி ரசிகர்களும்... அனைத்து மொழி திரைப்படங்களையும் பார்வையிடுகிறார்கள். அதனால் எந்த எல்லைக்கோடும் இல்லை என்பதால், மலையாளத்தில் நடிக்க சம்மதித்தேன். ஊர்வசி மேடம் ஒரு காட்சியை இயக்குநர் விளக்கும்போது... அதனை எப்படி உள்வாங்கிக் கொள்கிறார்கள்... அதனை எப்படி வெளிப்படுத்துகிறார்கள்... எந்த வகையில் மேம்படுத்துகிறார்கள்... என்பதனை உடனிருந்து காணும் பாக்கியம் கிடைத்தது. என்னுடைய திரையுலக பயணத்தில் நான் சந்தித்த மிக சிறந்த தயாரிப்பாளர் டாக்டர் அஜித் ஜாய். படத்திற்கு என்ன தேவை.. படக்குழுவினருக்கு என்ன தேவை.

என்பதனை தெரிந்து கொண்டு அனைத்து உதவிகளையும் செய்து, அனைவரையும் சமமாக நடத்தினார். இதற்காக அவருக்கு பிரத்யேக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌ தமிழ் ரசிகர்களுக்கும் இந்த படம் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.





இயக்குநர் லலிதா சுபாஷ் சுப்பிரமணியன் பேசுகையில், '' நான் நிறைய தமிழ் படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். என்னுடைய இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், சிறிய முதலீட்டில் உருவான திரைப்படமாக இருந்தாலும்... அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற திரைப்படமாக இருக்கும். இதற்கு நிச்சயம் உங்களின் ஆதரவு தேவை'' என்றார்.


நடிகை ஊர்வசி பேசுகையில்,'' சின்ன முதலீட்டில் தயாராகும் படங்களுக்கும், பெரிய முதலீட்டில் தயாராகும் படங்களுக்கும் உழைப்பு ஒரே அளவு தான். இருந்தாலும் சின்ன பட்ஜெட்டில் தயாராகும் படங்களுக்கு விளம்பரம் அதிகம் தேவைப்படுகிறது.


ஒரு படத்திற்கு பலம் அதன் தயாரிப்பாளர் தான். பொதுவாக பத்திரிகையாளர்கள் எங்களைப் போன்ற நடிகைகளிடம் பிடித்த நடிகர்? பிடித்த நடிகை? பிடித்த கதாபாத்திரம்? பிடித்த இயக்குநர்? என கேள்விகளை கேட்கிறார்கள். இனி பிடித்த தயாரிப்பாளர் யார்? என்றும் கேளுங்கள். ஏனென்றால் இந்த படத்தின் தயாரிப்பாளர் எனக்கு ரொம்ப பிடிக்கும். வேறு சில தயாரிப்பாளர்களை பற்றி புகார் அளிக்கவும் வாய்ப்பு கிடைக்கும்.


படம் தரமான படமாக இருக்கிறதா? அனைத்து தரப்பினரையும் கவரும் அம்சங்கள் இருக்கிறதா? வணிகரீதியாகவும் அமைந்திருக்கிறதா? என ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்து, தயாரிப்பாளர் அஜித் ஜாய் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்.


கொரோனா காலகட்டத்தில் வீட்டில் வேலை இல்லாமல் உட்கார்ந்திருந்த போது, குறும்படங்கள் இணைய தொடர்களில் நடித்து உற்சாகமாக இருந்தேன். அப்போது இயக்குநர் லலிதா சுபாஷ் சுப்பிரமணியன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நான் நடித்த இணைய தொடர் குறித்து பாராட்டி பேசினார். வழக்கம்போல் அவருக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விசயங்களை பேசினேன். அடுத்த நாள் மீண்டும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, ஒரு சிக்கலான அம்மா கதாபாத்திரம் இருக்கிறது. அதனை நீங்கள் தான் நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். கதையை முழுவதுமாக விவரிக்க இயலாது. ஒரு வரியில் சொல்கிறேன் என்றார். பிறகு அதனை குறுஞ்செய்தியாக அனுப்பினார். படித்தவுடன் பிடித்தது. ஒரு மடத்தனமான... மூடத்தனமான.. நம்பிக்கை கொண்ட அம்மா கதாபாத்திரம். அந்த அம்மாவிற்கு மாலை ஆறு மணிக்கு மேல் பார்வையில் தடுமாற்றம் உள்ள மகன் ஒருவன் இருக்கிறான். அவன் உலகத்தில் உள்ள மற்றவர்களைப் போல் வாழ வேண்டும் என அந்த தாய் விரும்புகிறாள். அதனால் அந்த மகனுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளை விதிக்கிறாள். இந்த கட்டுப்பாடுகள்... அந்த பையனின் தன்னம்பிக்கையை பறித்து விடுகிறது. இந்த அம்மாவின் கணவனோ.. கலைஞனாக வேண்டும் என்ற ஆசையில், அதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். கணவனும் மனைவியும் வீட்டில் ஒன்றாக இருந்தாலும் மனமொத்து இல்லாததால் இந்தப் பையன், தமிழ் பேசும் பகுதிக்கு சென்று.. அங்கிருக்கும் கலையரசனிடம் நட்புக் கொள்கிறார்.


அப்பா, அம்மா, தாய், தங்கை.. என பல உறவுகளின் மீது கட்டாயமாக அன்பு செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதற்கென எழுதப்படாத சட்டங்களும் நிறைய உண்டு. ஆனால் நட்பு அப்படியல்ல. நட்புக்கு எந்த மொழியும் இல்லை. எந்த ஜாதியும் இல்லை. எந்த மதமும் இல்லை. எந்த நாட்டு எல்லையும் இல்லை. அத்தகைய விலை மதிக்க இயலாத உயர்ந்த நட்பின் மூலம் அவன் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுகிறது.


காதல் தான் உலகில் சிறந்த உணர்வு என சொல்பவர்கள் உண்டு. ஆனால் நட்பு என்பது ஆயுள் உள்ளவரை உடன் வரும். இதுதான் இப்படத்தின் ஹைலைட்டான விசயம்.


இதனுடன் தன்னுடைய பசியை கூட வெளியில் காட்டிக் கொள்ளாமல் கௌரவத்திற்காக வாழ்ந்து வரும் ஒரு நடுத்தர குடும்பம் ஒன்றும் உள்ளது


இந்த திரைப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு உங்களின் மேலான ஆதரவு வேண்டும். '' என்றார்.

コメント


bottom of page